இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் அறிமுகம்
இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை போக்க அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் பல திட்டங்களில் ஒன்று இலவச உணவு திட்டம். இத்திட்டமே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரபோவோவின் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது. விழா ஏதுவும் இன்றி சாதாரணமாக நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 190 சமையல் அறைகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.
இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் போது 2029 ஆம் ஆண்டில் நாட்டின் 280 மில்லியன் மக்கள்தொகையில் 82.9 மில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள் 3 மில்லியனாக அதிகரிக்கும் என்றார்.