• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிகரமாக பூமியின் தென் துருவத்தை அடைந்த அமீரக நிபுணர்கள்

நமது பூமி 23.5 டிகிரி சாய்வாண கோணத்தில் ஒரே அச்சில் சுழல்வதால் வட, தென்துருவ பகுதிகள் உருவாகின. இதில் தென் துருவ பகுதியில்தான் உலகின் 5-வது பெரிய கண்டமான அண்டார்டிகா உள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் பனிப்பாறைகள் சூழ்ந்து வெண்மையாக காணப்படும் சிக்கலான பகுதியாகும்.

தென் துருவத்தில் வாழ தகவமைப்புகளுடன் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். அந்த அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 1959-ம் ஆண்டு 12 நாடுகள் இரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது.

இதில் தற்போது 49 நாடுகள் இணைந்துள்ளன. இந்த பகுதியில் 28 நாடுகள் ஆங்காங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. கோடை காலம் நிலவும் போது மொத்தம் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் வந்து தங்கி இருப்பர். அண்டார்டிகா மண்ணில் கொடி நாட்டிய 13-வது நாடு இந்தியாவாகும்.

துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது. அதேபோல சூரியன் வானின் உச்சிக்கு வருவதில்லை. இதில் தற்போது அமீரக தேசிய வானிலை மையம், பல்கேரியாவின் துருவ ஆராய்ச்சி பயிற்சி மையத்துடன் இணைந்து கூட்டு அறிவியல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

இதில் அமீரக தேசிய வானிலை மையத்தில் பணியாற்றும் அகமது அல் காபி மற்றும் பதர் அல் அமெரி ஆகிய 2 நிபுணர்கள் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்து தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இதற்காக இருவருக்கும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக இருவரும் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர். இந்த நிபுணர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் 2 வானிலை மற்றும் நிலநடுக்க கண்காணிப்பு மையங்கள் அமீரகம் சார்பில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் துருவப்பகுதியில் வானிலை மாற்றங்கள் மற்றும் நிலநடுக்க செயல்பாடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்.

இது உலகின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புரிதலை மேம்படுத்தும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குனரும், சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவருமான டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply