தேசிய மக்கள் சக்தி மீது சிலர் சேறுபூச முயல்கின்றனர்
இலங்கை
பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை” என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘பெருந்தோட்டப்பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளை அமைப்பதற்குரிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது அமைச்சின் செயலாளர் கூறினார் எனவும், மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பட்டு வருகின்றன. அவ்வாறான எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி மீது சேறு பூசும் விதமாக சில குழுக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் எந்த நோக்கத்துக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களோ அந்த நோக்கம் நிறைவடையும் வரை எமது ஆட்சியை கவிழ்க்க முடியாது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் மிக விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.