உடல்நலம் குறித்து வதந்தி- சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா
நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலை மறுத்த நாசா, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய படத்தை நாசா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
அதில், சுனிதா ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் குழு விண்கலத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து பூமியை எட்டிப்பார்க்கிறார். இதன்மூலம் சுனிதா வில்லியம்ஸ் நலமாக உள்ளார் என்பது தெரிகிறது.
முன்னதாக, சுனிதா தனது எடை குறைப்பு குறித்த வதந்திகளை மறுத்து, நான் இங்கு வந்தபோது என்ன எடை இருந்தேனோ அதே எடையில் இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.