நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது. உலகின் தலை சிறந்த மேதைகளில் இளையராஜாவும் இருப்பார். 83 வயதிலும் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இந்த கால கட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்து கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா.
கதாநாயகனாக நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள். விடுதலை பாகம்-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் கூறும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும்.
கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.
எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள காமிரா முன்பு எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர்.
தனுஷ், நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்க வில்லை. அது இரண்டு பேருக்கும் உட்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.