காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.
பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ்
ஆனால் ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக 3 அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் படு ரகசியமாக வைத்திருக்கும் பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் [Parchin military complex] அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில் உள்ள டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சி
முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்தது.
ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேல்கான் 2
அணு ஆயுதத்தில் உள்ள யுரேனியத்தை சுற்றி அமைக்கப்படும் பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் வெடிமருந்துகள் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் ஆகும். இந்த பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் தயாரிக்க பயன்பட்ட சாதனம் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.