TamilsGuide

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயார் – வவுனியாவில் ஜனாதிபதி அநுர

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை மீள் வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எமது நாடு அனைத்து அம்சங்களிலும் பிளவுபட்டுள்ளது. இவ்வாறு பிளவுபட்டுள்ள நிலையில் நாம் முன்னோக்கிச் செல்ல முடியாது. இந்த பிளவுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவருவதே எமது பிரதான நம்பிக்கை.

இதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும். அந்த இயக்கம் தேசிய மக்கள் சக்தி. அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் இயக்கம் வெற்றிபெற வேண்டும். அதுவே திசைகாட்டியின் வெற்றி.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எமது செயற்பாடுகளில் குறைபாடு காணப்பட்டது. அதனால் தான் அந்த மக்கள் பழைய கட்சிகளைத் தெரிவு செய்தனர்.

ஆனால் கடந்த செப்‍டெம்பர் 11 ஆம் திகதி நடந்தது என்ன?

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. வடக்கு மக்கள் அந்த வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு நாம் கவனத்தில் எடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 

Leave a comment

Comment