TamilsGuide

சாதிப்பாரா ட்ரம்ப்?

உலகம் முழுவதும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மேனாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான அவர் தனது 78ஆவது வயதில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இந்தக் கட்டுரையை எழுதும் போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆகக் குறைந்தது 312 தேர்தல் கல்லூரி வாக்குகளை ட்ரம்ப் பெறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி செனட் சபை எனப்படும் மேலவையிலும் குடியரசுக் கட்சியே பெரும்பான்மையைப் பெறும் நிலை உள்ளது.
 
மறுபுறம், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்குப் பிராந்தியம் என வர்ணிக்கப்படும் நியூ யோர்க்கில் 1988இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்றதை விடவும் குறைவான வாக்குகளையே அவரால் பெற முடிந்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் அவர் 226 தேர்தல் கல்லூரி இடங்களையே பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனநாயகக் கட்சிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் செல்வாக்குப் பிரதேசங்களிலும் அவரால் குறைந்தளவு வாக்குகளையே பெற முடிந்திருக்கின்றமை ஜோ பைடன் நிர்வாகத்தின் மீதான மக்களின் அதிருப்தியையும், கமலா ஹாரிஸ் வழங்கிய வாக்குறுதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

ட்ரம்பின் வெற்றிக்கு பைடன் நிர்வாகத்தின் தவறான வெளியுறவுக் கொள்கைகளை பிரதான காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பிலான செலவினங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போர் முயற்சிகளுக்கான ஆதரவு ஆகிய இரு விடயங்களும் இம்முறை தேர்தல் பரப்புரைகளின் மிகப் பெரிய பேசுபொருளாக அமைந்திருந்தன. இவை தவிர உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை, அகதிகள் தொடர்பான விவகாரம் என மேலும் பல விடயங்களும் இந்தத் தேர்தலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

உள் நாட்டிலும், உலக அரங்கிலும் கவனத்துக்குரிய பல விடயங்கள் இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப் அவர்களை இலக்கு வைத்து ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட தனிநபர் தாக்குதல்களும், பரிகாசங்களும் ட்ரம்ப் மீதான அனுதாபமும் ஆதரவும் பெருகக் காரணமானது என்பதை மறுப்பதற்கில்லை. தவிர, அவர் மீதான இரண்டு கொலை முயற்சிகளும், ஊடகங்களில் அவர் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களும், அவர் மீதான கேலிகளும் கூட அவருக்கான வாக்கு வீதம் அதிகரிக்கக் காரணங்கள் எனலாம்.

ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிரதான காரணமாக அவரது வெளியுறவுக் கொள்கை இருந்தது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் உக்ரைன் போர் உள்ளிட்ட போர்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இளம் வாக்காளர்கள், முதல் தடவையாக தேர்தலில் வாக்களிப்பவர்களின் பெருவாரியான ஆதரவை இம்முறை ட்ரம்ப் பெற்றிருக்கிறார். முதல் தடவையாக அவர் தனது போட்டியாளரை விடவும் 9 விழுக்காடு அதிகமாக இளம் வாக்காளர்களின் வாக்கைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மத்தியில் ட்ரம்பை விடவும் ஜோ பைடன் 30 விழுக்காடு வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.

பென்னிசில்வேனியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் உள்ள லத்தின் மொழி பேசும் வாக்காளர்களின் அதிக வாக்குகள் இம்முறை ட்ரம்பைச் சென்றடைந்துள்ளன. அதேபோன்று விஸ்கொன்சின் மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குகளையும் ட்ரம்ப் அதிகமாகப் பெற்றுள்ளார்.

மிச்சிகன் மாநிலத்தில் அரபுலகப் பின்புலம் கொண்டோர் அதிகமாக வாழும் தெற்கு டியர்போன் பிராந்தியத்தில் இம்முறை ஜனநாயகக் கட்சியின் வாக்குவீதம் சரிந்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் கொடிய போரை பைடன் நிர்வாகம் கையாளுவது தொடர்பில் அரபுப் பின்னணியைக் கொண்ட வாக்காளர்கள் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. கடந்த தேர்தலில் இந்தப் பிராந்தியத்தில் ஜோ பைடனுக்கான ஆதரவு 88 விழுக்காடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பரப்புரைகளில் கூறியதைப் போன்று உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பால் முடியுமானால் உலகெங்கும் பரந்து வாழும் சமாதான விரும்பிகள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அது நடைபெறுமா?
 
போர்களை முடிவுக்குக் கொண்டு வருவேன் எனக் கூறிய ட்ரம்ப், அவற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது தொடர்பான தெளிவான திட்டம் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆற்றிய உரையில் கூட தனது ஆட்சியில் போர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார். அதேவேளை துணை ஜனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜே டி வான்ஸ் உக்ரைனுக்கான படைத் துறை உதவிகள் நிறுத்தப்படும் எனப் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்குலகைப் பொறுத்தவரை அரசியல் உயர் மட்டங்களில் கமலா ஹாரிஸுக்கு அதிகளாவான ஆதரவு இருந்தமையை மறைப்பதற்கில்லை. அதற்கான முக்கியமான காரணங்களுள் ஜனநாயகக் கட்சியின் உக்ரைன் ஆதரவு நிலைப்பாடும் ஒன்று. சற்றொப்ப மூன்று வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் போருக்கு பெருமளவிலான நிதி மற்றும் ஆயுதப் பங்களிப்பை மேற்குலகம் வழங்கி வருகின்றது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. மறுபுறம், ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிட்ட உக்ரைன் போருக்கான அந்த நாடுகளின் செலவினம் ட்ரம்ப் ஆட்சியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் நிலையில் தாம் எதிர்பார்த்த பலனைத் தராமல் போய்விடும் என்ற அச்சம் அந்த நாடுகள் மத்தியில் உள்ளது.

மேற்குலகினால் முன்னின்று நடத்தப்படும் போரை மேற்குலகு நினைத்தால் முடிவுக்குக் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால், அரசியல் தலைவர்கள் மாத்திரம் முடிவெடுக்கும் விடயமாக அது இல்லை. உலகின் பெரு வணிகர்கள், ஆயுத வியாபாரிகள், கூலிப் படையினர் எனப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

ரஸ்ய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி, அந்த நாட்டின் வளங்களைப் பங்குபோடத் துடிக்கும் உலகின் செல்வாக்குமிக்க சக்திகளைத் தாண்டி தான் நினைத்ததை ட்ரம்பால் சாத்தியமாக்க முடியுமா என்பது மிகப் பாரிய கேள்வியாக உள்ளது. அவ்வாறு செய்வதற்கு ட்ரம்பை அவர்கள் அனுமதிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. இந்த இடத்தில் ரஸ்யாவின் மேனாள் ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ட்ரம்ப் வெற்றிபெற்று உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அவர் தீவிரமாக முயல்வேரேயானால் 1963இல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கென்னடிக்கு நடந்தது போல் அவருக்கு நடக்கலாம் என தேர்தலுக்கு முந்திய காலகட்டத்தில் மெத்வதேவ்; கூறியிருந்தார். மெத்வதேவின் கருத்து சிலருக்கு அதீத கற்பனை போன்று தோன்றக் கூடும். ஆனால், ஏற்கனவே ட்ரம்ப் மீதூன இரண்டு கொலை முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில் எதுவும் சாத்தியம் என்பதே யதார்த்தம்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அடுத்த வருடம் யனவரி மாதம் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பதவியேற்க உள்ளது. அதுவரை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே பதவியில் இருப்பார். தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பரிசீலனை செய்யும் பைடன் உக்ரைன் மற்றும் காசா போர்களை முடிவுக்குக் கொண்டுவர தன்னாலான முயற்சிகள் எதனையும் இக் காலப்பகுதியில் செய்வாரா என உலகம் எதிர்பார்த்து நிற்கிறது. காசா போரைப் பொறுத்தவரை இஸ்ரேலுக்கான ஆயுத தளபாட உதவிகளை நிறுத்தினாலேயே இஸ்ரேலின் போர் முனைப்புக் குறைந்துவிடும். உக்ரைன் நிலைமையும் அத்தகையதே. பதவிக் காலத்தில் செய்யாததை பதவியை விட்டுப் போகும் காலத்திலாவது செய்யத் துணிவாரானால் பெறுமதியான பல உயிர்கள் காப்பாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
 

2020 தேர்தல் முடிவுகளை அடுத்து ஜோ பைடனும், நான்சி பெலோசியும் ஒரு பலமான குடியரசுக் கட்சியைப் பார்க்கக் காத்திருக்கிறோம் எனக் கிண்டலாகக் கூறியிருந்தனர். நான்கு வருடங்களில் ட்ரம்ப் தனது கட்சியைப் பலமான நிலைக்கு இட்டுச் சென்று, தேர்தலில் வெற்றி பெற்று சாதனையும் படைத்து நிற்கிறார். தான் வாக்குறுதி அளித்தபடி உலகில் நிகழும் போர்களையும் தனது பதவிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வருவாரானால் அவர் உண்மையிலேயே ஒரு உன்னதமான சாதனையாளர் என ஒத்துக் கொள்ளலாம்.

 

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a comment

Comment