கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.
போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் நடப்பது இன அழித்தொழிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐநா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உயிரிழந்த 43,500 பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர்.