TamilsGuide

கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியீடு

கொவிட்-19 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை இலகுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமூக ஊடகக் குழுக்களின் ஊடாக ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட சகல கல்வி அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்பாடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் அவ்வாறான குழுக்களின் ஊடாக ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அவ்வாறான குழுக்களின் நிர்வாகிகளில் ஒருவராகப் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் இருக்க வேண்டும் எனவும், குறித்த குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலப்பகுதியை முழுமையாகப் பயன்படுத்தி, பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக சமூக ஊடக தொடர்பாடல் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி செயற்பாடுகளுக்காகத் தொடர்பாடல் சாதனங்கள் பயன்படுத்தப்படுமாயின், தகவல் தொழில்நுட்ப வசதி கிடைக்காத மாணவர்கள் பாதிப்படையாத வகையில் செயற்பட வேண்டும்.

குறிப்பாக ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாடசாலைகளுக்குக் கொண்டு வர வேண்டிய பொருட்கள் தொடர்பில் அறிவிக்கும் போது உரிய திட்டம் பின்பற்றப்பட்டு, பெற்றோருக்கு போதுமான காலப்பகுதியை வழங்க வேண்டும் எனக் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment