ஜேர்மனியில், ஆளும் கூட்டணி உடைந்ததால், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஜேர்மனியில், SPD, Alliance 90/The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
இந்நிலையில், கூட்டணிகளுக்குள் கொள்கை கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. ஜேர்மன் அரசில் FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindner நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
அவருக்கும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, திடீரென Christian Lindnerஐ அவரது பதவியிலிருந்து நீக்கியுள்ளார் சேன்ஸலர்.
அதைத் தொடர்ந்து, FDP கட்சி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது.
ஆகவே, ஷோல்ஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அது ஜேர்மனியில் முன்கூட்டியே தேர்தலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் ஆட்சி மாறி ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளதன் தாக்கத்தை ஜேர்மனி எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்ததற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர் ஷோல்ஸ்.