TamilsGuide

இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம் -ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாம் மக்களின் குரலாக தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம். இன மத சமூக வேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம். மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றுக்கு கொண்டு செல்வதற்கும் அவர்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றிக்கொடுப்பதற்கும் சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தேவை.

ஐக்கிய ஜனநாயகக்குரல் இன மத பேதமின்றி மக்களின் குரலாக செயற்படும்.எமது கட்சி புதிதாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும் ஆனாலும் எமது கட்சிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் வர்த்தகர்கள் புலம்பெயர்ந்தோர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஏனெனில் எமது கொள்கை திட்டத்தினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மீதும் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.அதனாலேயே ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர். நாம் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல.

பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. ஊழல் மோசடியற்ற தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் .அதனாலேயே ஒலிவாங்கி சின்னத்தில் புதிய கட்சியின் நாம் தேர்தலில் களமறிங்கியுள்ளோம்.

நாட்டிற்கும் மக்களுக்கு சேவை செய்வதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் கடந்த காலங்களிலும் அதனை நிரூபித்துள்ளோம். ரஞ்சன் ராமநாயக்க ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவரும் அல்ல. ஊழல்வாதிகளுடன் தொடர்புடையவரும் அல்ல.

நான் ஊழல் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவன் அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே தேர்தலில் வெற்றிபெறுவதுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment