தமிழ் திரையுலகில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருந்தே கொண்டே தான் வருகிறது. பாடல்களால் வெற்றிப் பெற்ற படங்களும் உண்டு, ஹிட் பாடல்கள் இல்லாதததால் வரவேற்பு பெறாத படங்களும் உண்டு எனலாம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் எல்லைகளை தாண்டி செல்லும் நிலையில், திரை இசையில் பல்வேறு பிரிவுகள் உண்டாகி, அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
அந்த வரிசையில், சமீப காலங்களில் அதிகம் வைரல் ஆகும் புது வகை பாடல்களாக 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி வருகிறது. இதனால் சினிமா அல்லாது தனிமனிதனாக இசை ஆர்வம் கொண்டுள்ள பலருடைய திறமை இங்கு மக்களின் பார்வைக்கு வருகிறது. சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.
அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் இந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் உள்ள இன்ஃபூலுயன்சர்ஸ் இப்பாடலிற்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.
அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.
யார் இந்த சாய் அபயங்கர்? சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் சாய் அபயங்கர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல இளம் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இந்த வாய்ப்பு சாய் அபயங்கருக்கு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா அவரது 16- வது வயதில் தனது முதல் படமான 'அரவிந்தன்'-க்கு இசையமைத்தார்.
அனிருத் அவரது 22 வது வயதில் முதல் படமான 3 திரைப்படத்திற்கு இசையமைத்தார். சாம் சி. எஸ் அவரது 25 வது வயதில் முதல் படமான 'அம்புலி' திரைப்படத்திற்கு இசையமைத்தார். நிவாஸ் கே. பிரசன்னாவும் அவரது 25 வயதில் முதல் படமான 'தெகிடி' திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
தற்பொழுது சாய் அபயங்கர் அவரது 21 வயதில் தன்னுடைய முதல் படமான பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இளம் இசையமைப்பாளர்கள் பலர் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சாய் அபயங்கர் மிகப் பெரிய படத்திற்கு இசையமைக்க இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பதும், அதனை தக்கவைப்பதை பற்றி அத்துறையை சேர்ந்த பலரும் கூறி கேட்டிருப்போம். அந்த வகையில், தன் கையில் மிகப் பெரிய வாய்ப்பை பெற்று இருக்கும் அபயங்கர் அதனை தன் திரைத்துறை பயணத்திற்கான வெற்றிப் படியாக மாற்றிக் கொள்வார் என எதிர்ப்பார்க்கலாம். அவரது வெற்றி பயணத்திற்கு நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.