TamilsGuide

பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,206 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment