தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து நட்சத்திர தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு. இந்த தருணத்தில் தயாரிப்பாளர் தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு வளாகம்- கட்டுமான நிறுவனம் படத் தயாரிப்பு நிறுவனம் என பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் ஆதித்யா ராம்.
இவர் ஏற்கனேவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர் திரைப்படத்துறையின் தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் அனுபவம் மிக்க தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அறிவிப்பதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் படப்பிடிப்பு வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ''
எங்கள் நிறுவனம் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் 50 ஆவது திரைப்படமாக 'கேம் சேஞ்சர்' தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் விவரித்த போது வியந்தேன். தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.
தயாரிப்பாளர் ஆதித்யா ராம்- என் நண்பர். அவர் 2002 ஆம் ஆண்டில் நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அதன் பிறகு சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அவரிடம் ஒரு முறை நான் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தமிழில் வழங்க முடியுமா? என கேட்டேன். அதற்கு அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - ஆதித்யா ராம் மூவிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 'கேம் சேஞ்சர் ' படம் மட்டுமல்ல.. தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு தமிழில் திரைப்படங்களை தயாரிக்க விரும்பினேன். அதனால் நண்பர் ஆதித்யா ராமுடன் கூட்டணி அமைத்து தமிழில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். அத்துடன் பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்கிறோம்.
தயாரிப்பாளர் ஆதித்யா ராம் பேசுகையில், '' எங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ஆதித்யா ராம் மூவிஸ் ஏற்கனவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஏக் நிரஞ்சன்' என்ற திரைப்படத்திற்குப் பிறகு தயாரிப்பு பணியில் இருந்து விலகினேன். ஏனெனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட விரும்பினேன். அதனால் படத் தயாரிப்பிற்கு தற்காலிகமாக இடைவெளியை உருவாக்கிக் கொண்டேன்.
தயாரிப்பாளரும் , நண்பருமான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தில் அவருடன் இணைந்து இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் தமிழ் திரைப்படங்களையும், பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.
இதற்கான பொருத்தமான கதை... இயக்குநர் ..ஆகிய விசயங்களை இத்துறையில் அனுபவிக்க தில் ராஜுவின் வழிகாட்டலுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படங்களை அளித்த தயாரிப்பாளர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை மகிழ்ச்சிகரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஆதித்யா ராம் குழுமம் - திரைப்படத்துறைக்கு ஏராளமான பணிகளை செய்து வருகிறது. அதனால் நாங்கள் வெற்றிகரமான படைப்புகளை வழங்குவோம் என நம்புகிறோம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.