TamilsGuide

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? - வைரலாகும் நீர் யானையின் கணிப்பு வீடியோ

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்பதுதான் தற்போதைய கோடிக்கணக்கானோரின் கேள்வி. இதற்கான நாள்தான் இன்று. இன்று அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே யார் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுவது உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகள் அல்லது பூங்காவில் உள்ள மிருகங்கள் ஆகியவற்றை வைத்து கணிப்பது உண்டு.

அப்படித்தான் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானையை வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி யாருக்கு என கணித்துள்ளனர்.

தாய்லாந்தின் உள்ள பூங்காவில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை உள்ளது. இந்த நீர் யானையை கவரும் வகையில் இரண்டு தர்பூசணி பழங்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் டொனால்டு டிரம்ப் எனப் பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கமலா ஹாரிஸ் என பெயரிட்டு தனித்தனியே வைக்கப்பட்டது

நீரில் இருந்து வெளியே வந்த குட்டி நீர் யானை நேராக சென்று டொனால்டு டிரம்ப் எனப் பெயர் எழுதப்பட்ட பழத்தை சாப்பிடுகிறது. இதன்மூலம் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என குட்டி நீர் யானை கணித்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியும்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
 

Leave a comment

Comment