TamilsGuide

வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகம் உணர்கிறேன்- டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (5.11.2024) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்

முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.

இதேபோன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தங்களுடைய வீட்டின் அருகே உள்ள பாம் பீச் பகுதியில் அமைந்த வாக்கு மையத்திற்கு மனைவி மெலனியா டிரம்புடன், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகை தந்து, வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, நான் அதிக நம்பிக்கையாக உணர்கிறேன். நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.

அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பென்சில்வேனியா மாகாணத்தில் அரசியல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, கடின உழைப்பை தரும் தேசப்பற்றாளர்கள் நாட்டை பாதுகாக்க போகிறார்கள் என்றார். என்னுடைய தலைமையின் கீழ், பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.

அமெரிக்காவை வளம் கொழிக்கும் நாடாக மீண்டும் உருவாக்குவோம். ஆனால், அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நாம் அனைவரும் இதற்காக காத்திருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment