TamilsGuide

ஆச்சர்யமாக இருக்கிறது – அந்தத் திருமண ஒப்பந்தத்தைப் பார்க்கும் போது.

அது – தமிழகத்தின் இரு முன்னாள் முதல்வர்களுக்கு இடையே நடந்த திருமண ஒப்பந்தம்.

1962 ஜூன் மாதம் 14 ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கும், வி.என்.ஜானகிக்கும் நடந்த திருமணம் பதிவு செய்யப்பட்டபோது, அதற்குச் சாட்சியாக கையெழுத்திட்டிருப்பவர்கள் எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்கரபாணியும், ஜானகியின் சகோதரர் மணி என்ற நாராயணனும்.

திருமண ஒப்பந்தத்தை நம்மிடம் காண்பித்தவர் ஜானகியம்மாளின் பேரனான குமார் ராஜேந்திரன்.

திருமணப் பதிவு
“எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்தவர் ஜானகி அம்மாள். அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்” என்று சொல்லும் குமார் ராஜேந்திரன் எம்.ஜி.ஆரைப் பற்றியும், ஜானகியைப் பற்றியும் சொன்ன விஷயங்கள் சுவாராஸ்யமாவை.

“எம்.ஜி.ஆர் திரைப்படத்துறையில் வளர்ந்து கொண்டிருக்கும்போதே தமிழ்த் திரைப்படங்களில் நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

‘ராஜமுக்தி’ படத்தில் தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாக வி.என்.ஜானகி நடிக்கும்போது தான், அதே படத்தில் நடித்த எம்.ஜி.ஆரும், ஜானகியும் சந்தித்துக் கொண்டார்கள்.

‘மோகினி’, ‘மருதநாட்டு இளவரசி’ படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். ‘சந்திரலேகா’, ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ போன்ற படங்களிலும் ஜானகி சிறப்பாக நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆரை மணக்கிற வரை அவர் நடித்திருந்த திரைப்படங்கள் 31. பிரபல பாடலாசிரியர் பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால் ஐயரின் மகள் தான் ஜானகி. இவர் தமிழாரியராகப் பணியாற்றிய கும்பகோணம் சிறுமலர் பள்ளியில் தான் ஜானகி அம்மா பயின்றார்.

எம்.ஜி.ஆருடன் திருமணம் நடந்தபிறகு குடும்பத்துடன் குடியேறிய இடம் ராமாவரம் தோட்டம். ஜானகியின் சொந்தச் சகோதரர் நாராயணனின் குழந்தைகளை எடுத்து வளர்த்தார் எம்.ஜி.ஆர். என்னுடைய அம்மா லதா தான் அதில் மூத்தவர். அவ்வளவு பிரியத்துடனும், கண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்கள் இருவரும்.

தமிழில் தான் ‘வணக்கம்’ சொல்லப் பழக்கியிருக்கிறார்கள். பொங்கல் திருநாளைத் தான் முக்கிய விழாவாக, தோட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி, சேலை எடுத்துக் கொண்டாடுவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.

1967-ல் எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு வழக்கு விசாரணை நடந்தபோது, அப்போது சிறுமியாக இருந்த என்னுடைய அம்மாவும் சாட்சி சொன்னார்.

எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்தார்கள் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும். கல்விக்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறவர்கள் பசியாறிவிட்டுத் தான் வெளியே செல்ல முடியும். அந்த அளவுக்கு வருகிறவர்களை உபசரிப்பார்கள். ராமாவரம் தோட்டத்திலிலுள்ள அடுப்படிக்கு ஓய்வே இருக்காது.

என்னுடைய அம்மாவுக்குத் திருமணமாகி அவர்கள் புகுந்த வீடு செல்லும்போது, எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும் கூறிய அறிவுரையில் என்னுடைய அம்மா நெகிழ்ந்துபோயிருக்கிறார்.

“ராமாவரம் தோட்டத்து வீட்டிற்கு வருகிறவர்களை எப்படிக் கவனித்திருப்போம் என்பதை நீ கவனித்திருப்பாய். நீயும் அப்படிச் செய்ய வேண்டும். வருகிறவர்கள் பசியோடு திரும்பிப் போகக் கூடாது. குறைந்தபட்சம் சாதமும், தயிரும், ஊறுகாயும், ஒரு பழமும் இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள். போதும்.

எப்போதும் உதவி கேட்டு வருகிறவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் பசியோடு வருகிறவர்களை உணவு கொடுத்து, வயிறு நிறைந்தால் “போதும்” என்று சொல்லிவிடுவார்கள். உணவு கொடுப்பதன் மூலமே “போதும்” என்கிற வார்த்தை ஒருவரிடமிருந்து வரும். அப்படிப்பட்ட உணவை மற்றவர்களுக்கு நீ அளிக்க வேண்டும்” என்று கூறி அனுப்பியுள்ளனர்.

எம்.ஜி.ஆரின் குணமறிந்து அவருக்குப் பணிவிடை செய்வதையே இயல்பாகக் கொண்ட ஜானகியம்மாளுக்கு ஆறுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரியும். இந்தி, ஆங்கிலம் எல்லாம் சரளமாகப் பேசுவார்.

எம்.ஜி.ஆருக்கான தனி அடையாளம் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஜானகி அம்மா தான். 1968 ஆம் ஆண்டு ‘அடிமைப் பெண்’ படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது. அப்போது அவருக்கு அளித்த விருந்தின்போது தான் வெள்ளைத் தொப்பி அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

சகோதரருடன் ஜானகி
அப்போது கூடவே கருப்புக் கண்ணாடி ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து தொடர்ந்து அணிந்து கொள்ளச் சொன்னவர் ஜானகி அம்மாள். பிறகு அதுவே எம்.ஜி.ஆரின் அடையாளமாக மாறியது.

எம்.ஜி.ஆரை “சேச்சா” என்று தான் நாங்கள் கூப்பிடுவோம். ஜானகியம்மாவை “தோட்டத்தம்மா” என்று கூப்பிடுவோம். சேச்சா முதல்வராக இருந்தபோது, காலையில் நாளிதழ்களில் வரும் செய்திகளை ‘மார்க்’ செய்து வைத்திருப்பார்கள் அவருடைய நேர்முக உதவியாளர்கள்.

அந்தப் பேப்பர்களையும், சர்க்கரை போடாத பாலையும் எம்.ஜி.ஆரின் அறைக்கு எடுத்துச் சென்று கொடுப்பேன். அப்போது சின்னச் சின்னதாக என்னிடம் கேள்விகள் கேட்பார் சேச்சா. படிப்பு குறித்து விசாரிப்பார். பழங்கள் சாப்பிட்டும்போது, எங்களையும் சாப்பிடச் சொல்வார்.

1984-ல் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோதிருந்தே உடனிருந்து எம்.ஜி.ஆரை ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொண்டார் ஜானகி அம்மா. அமெரிக்காவில் புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையின் போதும் கூடவே இருந்தார்.

1987-ல் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும் அமெரிக்காவுக்குச் சென்றபோது, ஜானகி அம்மாவுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை தியேட்டருக்கு தோட்டத்தம்மாவை அழைத்துச் சென்றபோது, அவர் அணிந்திருந்த தாலி, கம்மல், வளையல் போன்ற நகைகளை எம்.ஜி.ஆரின் கையில் கொடுத்தார்கள்.

அதைக் கையில் வாங்கிக் கொண்ட எம்.ஜி.ஆர் கண் கலங்கி “என் ஜானு தாங்கிக் கொள்வாளா?” என்று கேட்டுவிட்டுச் சாப்பிடாமலேயே இருந்திருக்கிறார். அந்த அளவுக்கு தோட்டத்தம்மாவிடம் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார் சேச்சா.

அமெரிக்காவிலிருந்து சேச்சா தமிழகம் திரும்பியதிலிருந்து எங்கே சென்றாலும், கூடவே ஜானகி அம்மாவும் செல்வார். எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்ட ‘நவீன சாவித்ரியாகவே’ பிரபல பத்திரிகை ஒன்று அப்போது எழுதியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

1987 டிசம்பர் 24 ஆம் தேதி. அதிகாலை நேரத்தில் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஜானகியம்மாள் துடித்துப் போனார். அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய கட்சி பிளவு பட்டபோதும் கலங்கினார். பலர் வற்புறுத்தியதால் தான் ஒரு அணிக்குத் தலைமை தாங்கினார்.

தமிழக முதல்வராகச் சிறிது காலம் இருந்தார். அந்த விதத்தில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் அவர் தான். பலர் அவரை விமர்சித்தபோதும், எந்த விதத்திலும் கண்ணியம் குறையாத அரசியலையே அவர் நடத்தினார்.

1989 ல் பிரிந்திருந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான முயற்சிகளைச் சிலர் எடுத்தார்கள். திரு.நடராசன், பத்திரிகையாளர் திரு.சோ போன்றவர்கள் வந்து பேசினார்கள். ஜானகி அம்மாவுக்கு அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பைக் கொடுக்க ஜெயலலிதா அறிக்கையும் வெளியிட்டார்.

ஆனால் அந்த சமயத்தில் ஜானகி அம்மாவுக்கு எந்த அரசியல் பதவிகளிலும் விருப்பம் இல்லை. அரசியலை விட்டு ஒதுங்கும் மனநிலையில் இருந்தார். அவருடைய ஒரே விருப்பம் – தன்னுடைய கணவர் உருவாக்கிய மாபெரும் இயக்கம் பிரிவுகள் இல்லாமல் நீடித்து நிலைக்க வேண்டும் என்பது தான்.

இப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுலவகம் உள்ள கட்டடம் தோட்டத்தம்மாவுக்குச் சொந்தமானது. அவருடைய வருமானத்தில் வாங்கிய கட்டடத்தைக் கட்சியின் பெயருக்கு எழுதிக் கொடுத்து விட்டார். கூடவே இணைப்பின் போது இயக்கத்தின் கையிருப்பு நிதியையும் முழுமையாகக் கொடுத்தார் தோட்டத்தம்மா.

அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டாலும், அ.தி.மு.க.வின் ஒவ்வொரு அசைவையும் அவர் உற்றுக் கவனித்துக் கொண்டு தானிருந்தார். என்னைப் போன்ற பேரக்குழந்தைகளிடம் அவர் காட்டிய அன்பு அலாதியானது.

1996 ஆம் ஆண்டு. மே மாதம்.

என்னுடைய உறவினர்கள் பலர் படிப்பதற்காக வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, “நானும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகட்டுமா?” என்று கேட்டபோது, தோட்டத்தம்மா மறைவதற்கு முன்பு என்னிடம் சொன்ன அன்பான பதிலை என்றும் மறக்க முடியாது.

அவர் சொன்னது இது தான்.

“நான் உயிரோடு இருக்கிறவரை நீ என்னுடனே இரு”

எவ்வளவு அன்பு இருந்திருந்தால் இம்மாதிரி ஒரு வார்த்தையை தோட்டத்தம்மா சொல்லியிருப்பார்!

அதிமுக சிதைந்து விடக்கூடாது என்று நினைத்த ஜானகி அம்மாவின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதே அவருடைய உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பம்.

முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் நினைவு கூர்வது அரசின் கடமை. அதுபோல ஜானகி அம்மாவின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.” – நம்பிக்கையுடன் சொல்கிறார் வழக்கறிஞரான குமார் ராஜேந்திரன்.

-நா.மோகன்ராஜ்

நன்றி: குமுதம் 22.12.2020 தேதியிட்ட இதழில் இருந்து… 

-- “எம்.ஜி.ஆரின் திருமணப் பதிவைப் பார்த்திருக்கிறீர்களா?“
- வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்
https://www.thaaii.com
 

Leave a comment

Comment