TamilsGuide

அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகும் 7 இடங்கள் - அதி முக்கியமான ஸ்விங் ஸ்டேட்ஸ்! சூட்சமம் என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா சொற்ப வித்தியாசத்தில் டிரம்ப்பை விட முன்னிலையில் உள்ளார். எனவே இழுபறி ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.50 மாகாணங்களில் உண்மையில் கடுமையான போட்டி நிலவும் 7 முக்கிய மாகாணங்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஸ்விங் ஸ்டேட்டஸ்

அமெரிக்க அரசியலில் ஸ்விங் ஸ்டேட்டஸ் [Swing states] என்ற வார்த்தை பிரயோகம் உண்டு. அதாவது, ஜனநாயக கட்சிக்கு பாரம்பரியமாக இருக்கும் வாக்காளர்கள் உள்ள மாகாணங்கள் நீல ஸ்டேட்ஸ் என்றும் குடியரசு கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மாகாணங்களில் சிவப்பு ஸ்டேட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை.

1980 முதல் குடியரசுக் கட்சியினர் சிவப்பு மாகாணங்களிலும் , 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் நீல மாகாணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை. இவற்றை தவிர்த்து சில மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வாக்களிக்கும். எனவே இழுபறி நிலவும் இந்த மாகாணங்களை ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று அழைப்பது வழக்கம்.

இங்கு இரு கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும். கடைசி நேரம் வரை வாக்குகள் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் சூழல் இங்கு காணப்படுகிறது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 ஸ்விங் ஸ்டேட்டஸ் மாகாணங்கள் தேர்தல் களத்தில் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு உள்ள வாக்காளர்களே அமெரிக்காவின் விதியை தீர்மானிக்க உள்ளனர். குறிப்பாக கடந்த 2020 அதிபர் தேர்தலில், ஸ்விங் ஸ்டேட்டான அரிசோனாவில் அதிபர் ஜோ பைடன் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். எனவே எந்நேரமும் மாறக்கூடிய இந்த இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கமலா ஹாரிஸும், ட்ரம்பும் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

டிரம்ப் முன்னிலை

கடைசியாக நடந்த அட்லஸ் இன்டெல் போல் கருத்துக்கணிப்பின்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.
 

Leave a comment

Comment