TamilsGuide

இஸ்ரேலின் அடுத்த அஸ்திரம் - ஐ.நா.வின் பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கு தடை

பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலும் செயல்படத் தடை விதிக்கும் மசோதாவுக்கு நேற்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மசோதா நடைப்முறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும் என்று ஐநா கவலை தெரியவிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. லெபனான்- இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் நீலக் கோட்டில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.

மேலும் வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரல்ஸ் பிளான் என்ற திட்டமும் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.
 

Leave a comment

Comment