TamilsGuide

மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் நாள் எனவும், மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .

குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”21 ஆம் திகதி மக்கள் எனக்கு ஆணைவழங்கும்போது நான் மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளேன்.

இந்த நாட்டு மக்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் எதிர்நோக்கிய நெருக்கடியை மறக்கவில்லை. 21 ஆம் திகதி தீர்மானமிக்க ஒரு நாளாகும். நாட்டு மக்களினதும் நாட்டின் எதிர்காலத்தினையும் தீர்மானிக்கும் நாளாகும்.

எனவே மக்கள் மீண்டும் இருண்ட யுகத்திற்கு அல்லது வரிசையுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை தீர்மானித்து வாக்களிக்க வேண்டும். உணவு மருந்து உரம் எரிபொருள் எரிவாயு ஆகியவற்று தட்டுப்பாடு ஏற்பட்ட போது எவரும் அதனை பொருட்படுத்தவில்லை.

நாட்டு மக்களுக்கு என்னநடந்தாலும் பரவாயில்லை.நாங்கள் தப்பித்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் நாட்டை பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடி ஒழிந்தனர். இந்த தடவை நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் மக்கள் நலன் சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளேன்.

நாட்டை நெருக்கடிக்க மத்தியில் பொறுப்பேற்ற  அரசியல் கட்சி உறுப்பினர்கள் பலரின் ஒத்துழைப்புக்கு மத்தியில் நாட்டை இன்று நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்துள்ளோம். தற்போது ஜனாதிபதியாகும் கனவு பலருக்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மாற்று ஜனாதிபதியாவார். ஆனால் நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப அவர் முன்வரவில்லை. நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களில் கடினமான பல தீர்மானங்களை மேற்கொள்ள நேரிட்டது.

மக்கள் பாரிய சுமைக்கு மத்தியில் அதனை எதிர்கொண்டனர்.இன்று அதன்பிரதிபலன்களை மக்களுக்கு  வழங்கியுள்ளோம்.அஸ்வெசும சமுர்த்தி கொடுப்பனவு திட்டங்கள் அரச மற்றம் தனியார் துறையினரின் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம். வாழ்க்கை சுமையினை குறைப்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும். தேசிய உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதன் ஊடாக தேசிய வருமானத்தினை அதிகரிக்க முடியும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .
 

Leave a comment

Comment