TamilsGuide

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள்

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்து கொண்டிருந்தபோதே அதை ஆவலுடன் ஏ.பி.நாகராஜன் படித்து வந்தார். அதை படமாக்க விரும்பினார்.

கதை உரிமை, ஆனந்த விகடன் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. அவரை ஏ.பி.நாகராஜன் சந்தித்தார். தில்லானா மோகனாம்பாளை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். "இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்" என்றார், வாசன். ஆனால் ஏ.பி.நாகராஜன் இதற்கு சம்மதிக்கவில்லை.

"லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் அது என்னையே சேரட்டும். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் கொள்கை" என்றார், நாகராஜன். வாசன் சிரித்துக்கொண்டே, "நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுங்கள். ஆனந்த விகடனில் வந்த இந்தக் கதையை நீங்கள் அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுடைய திருவிளையாடல் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

கதைக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டார், நாகராஜன். "ரூ.25 ஆயிரம் கொடுங்கள் போதும்" என்றார், வாசன். உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டார், ஏ.பி.என்.   கதை உரிமைக்காக வாசன் ரூ.50 ஆயிரமாவது கேட்பார் என்று நாகராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். வெறும் 25 ஆயிரத்தை சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். கதைக்கு ரூ.50 ஆயிரமாவது தரவேண்டும் என்பது அவர் விருப்பம். எனவே, மீதி ரூ.25 ஆயிரத்தை கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்து விட தீர்மானித்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது, கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு, கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏ.பி.நாகராஜன் ஆஸ்பத்திரிக்குச் சென்று, அவரை சந்தித்தார். வாசனிடம் கதை உரிமையைப் பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.

"சற்று நேரத்துக்கு முன் வாசன் இங்கு வந்திருந்தார். நீங்கள் அவரிடம் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார்" என்றார், கொத்தமங்கலம் சுப்பு! இதைக் கேட்டு திகைத்துப் போன நாகராஜன், தான் கொண்டு போயிருந்த ரூ.25 ஆயிரத்தையும் சுப்புவிடம் கொடுத்தார்.

கீதப்ப்ரியன்

Leave a comment

Comment