TamilsGuide

தப்பியோடியவா்களிடம் நாட்டை ஒப்படைக்கத் தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில்

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை மீண்டும் எவரேனும் ஒருவர் சீரழித்தால், மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப ஒருபோதும் முடியாமல் போய்விடும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜனாதிபதித் தேர்தலை மக்கள் தங்களுக்கான கடைசி சந்தர்ப்பமாக கருதி வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Stables@ParkStreet இல் நேற்று புரட்சி செய்வோம் நிகழ்வு நடைபெற்றது.

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், கொழும்பைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி,

இந்தத் தேர்தல் எனது எதிர்காலத்தை அன்றி உங்கள் எதிர்காலத்தையே தீர்மானிக்கும்.

அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எவரும் தயாராக இருக்கவில்லை.
நாட்டில் சட்டம் ஒழுங்கு அற்றுப்போகும் நிலை உருவாகியது.

அந்த நிலை நீடித்திருந்தால் நாமும் பங்களாதேஷின் நிலையைக் கண்டிருப்போம்.

அந்த பொறுப்பை ஏற்காமல் மற்றைய தலைவர்கள் ஓடினாலும். மக்களுக்காக நான் அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டேன்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

அதற்காகவே வற் வரியை அதிகரித்தோம். அதனை செய்திருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

அதனால் ரூபாயின் பெறுமதியை நிலைப்படுத்தி பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடிந்தது.
இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இருப்பின் எமது செயற்பாடுகள் இன்று மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளன. நாம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரம் இன்னும் வலுவடையவில்லை. பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒப்பந்தங்களுக்கமைய நாம் செயற்படத் தவறினால் இன்றிருக்கும் நிலைத்தன்மை மீண்டு சரிவடையலாம்.

வலுவான பொருளாதாரத்தை உருவாக்க 5-10 ஆண்டுகள் ஆகும். அதற்காகத் திட்டமிட்டு செயற்படுகிறோம்.

எதிர்கால சந்ததியினருக்காக நாம் வலுவான, நவீன, போட்டி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாட்டுக்கான எனது நோக்கமும் அதுவேயாகும்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லை. தேசிய மக்கள் சக்தியும் மக்களிடம் பொய் சொல்கிறது.

பொருளாதாரக் கொள்கை என்ன என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அத்தோடு, நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்கள். அது உண்மையெனில் தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது வழக்குத் தொடர வேண்டும்.

இன்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றனர். உண்மையை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தங்களின் கடந்த காலத் தவறுகளை ஒப்புக் கொள்ளாதவர்கள் மீது எவ்வாறு எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைப்பது? இன்று மாற்றம் என்று கூறிக்கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டுகின்றனர். அவர்கள் கூறும் மாற்றம் என்னவென அவர்களுக்கே தெரியாது. அவர்களை நம்பி எப்படி வாக்களிப்பது?

அனுரவும் சஜித்தும் பொருத்தமற்ற மாற்றம் பற்றி பேசுகிறார்கள். இந்த நாட்டின் தேவைகள் அவர்களுக்குப் புரியவில்லை.

மற்ற அனைவரும் தோற்றுவிட்டதாகவும், தாம் மட்டுமே வென்றிருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளனர்.

மக்கள் தமது எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இல்லை” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment