TamilsGuide

அமீரகத்தில், மின்சார விமான டாக்சிகளை இயக்க அமெரிக்க நிறுவனம் விண்ணப்பம்

துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பல்வேறு குட்டி விமான நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் மின்சாரத்தில் இயங்கும் விமான டாக்சிகளை அமீரகத்தில் இயக்க அமெரிக்காவின் ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அபிதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள மின்சார விமான டாக்சிகள் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதி வரை இயக்கப்பட உள்ளது.

பொதுவாக துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு கார் மூலம் செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். இனி இந்த மின்சார விமான டாக்சி இயக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் இரு பகுதிகளுக்கும் சென்று வரலாம். இந்த மின்சார விமான டாக்சிகள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. மின்சாரத்தால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகை போன்ற நச்சு வாயுக்கள் இதில் வெளிவருவது இல்லை.

இதனை எளிதில் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றி விட முடியும். வருகிற 2026-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் சேவைக்காக இந்த டாக்சிகள் இயக்கப்படும் என சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு (2025) வெள்ளோட்டம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் மொத்தம் 6 மின்சார விமான டாக்சிகள் இயக்கப்பட உள்ளது. இதில் பைலட் அமர்ந்து 4 பயணிகள் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது இங்கிருந்து வெளிநாடு செல்லும் விமான பயணிகளுக்கு இந்த மின்சார விமான டாக்சி காத்திருப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

இந்த நிலையில் நடப்பு வாரம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த வான்வழி போக்குவரத்து மாநாட்டில் ஜோபி ஏவியேஷன் அமெரிக்க நிறுவனத்தின் நிறுவனர் ஜோபென் பெவிர்ட் அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் சைப் முகம்மது அல் சுவைதியை சந்தித்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சிகளை இயக்குவதற்கான சான்றிதழுக்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தார்.

இந்த ஏர் ஆபரேடர் என்ற சான்றிதழ் அந்த ஆணையத்தின் சார்பில் வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு தேவைப்படும் ஆவணமாகும். இதனை தொடர்ந்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சியை இயக்க விண்ணப்பித்த முதல் நிறுவனம் என்ற பெயரை இந்த அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளது.

Leave a comment

Comment