TamilsGuide

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை

அடுத்தாண்டு முதல் நாட்டில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹங்குரங்கெத்த பகுதியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நான் உங்களுக்கு உணவு கொடுத்தேன். மருந்தைக் கொடுத்தேன். எரிபொருள் கொடுத்தேன். உங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தி, வாழ வழியேற்படுத்தினேன்.

ஆனால், எனக்கு என்ன கூறினார்கள்? ரணில் ராஜபக்ஷ என்றார்கள். என்னை விமர்சித்தவர்கள் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் தப்பித்துச் சென்றார்கள்.
மக்களுக்கு உணவளித்தமைக்காக என்னை விமர்சித்தால், நான் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளேன்.

சர்வதேதச நாணய நிதியம் நாட்டை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் எனக் கூறியது. இதனால், சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியேற்பட்டது.
கடன் பெற்றுக்கொள்ளப்படுவது மட்டுப்படுத்தப்பட்டது. பணத்தை அச்சிடவில்லை. வங்கிகளில் கடன்பெறப்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால், நாம் வட் வரியை அதிகரித்தோம். நாம் எடுத்த கடினமான முடிவுகளால் இன்று ரூபாயின் பெறுமதி உணர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை எம்மால் குறைக்க முடிந்தது. ஆனால், இதுமட்டும் போதாது.

மக்களின் வாழ்க்கைச் சுமையை இன்னமும் குறைக்க வேண்டும். வேலை வாய்ப்பை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அஸ்வெசும, உறுமய வேலைத்திட்டங்களை இன்னமும் பலப்படுத்த வேண்டும்.

அடுத்த வருடம் முதல் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை இளைஞர்களுக்காக ஏற்படுத்துவோம். அரச சேவைகளில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த நிதி ஒதுக்குவோம்.

சுயதொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி, இந்த நாட்டை மேலும் பலப்படுத்துவோம். இதற்காகத்தான் நான் மக்கள் ஆணையைக் கோருகிறேன்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment