TamilsGuide

மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் - போப் பிரான்சிஸ், இந்தோனேசியா இமாம் அழைப்பு

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாகப் போப் பிரான்சிஸ் நேற்று இந்தோனேசியா சென்றிருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக கருதப்படுகிறது.

இந்தோனேசியா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை சென்ற போப் பிரான்சிஸ், அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது போப் பிரான்சிஸ் மற்றும் இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமர் இருவரும், மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்

முன்னதாக, போப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்கவும், அவர்மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டது தெரிய வந்தது.
 

Leave a comment

Comment