TamilsGuide

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றி- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய இரண்டு, கட்சிகளும் அர்ப்பணித்துள்ளன. எங்களுக்குள் வேறுபாடுகளும் இருந்தன.

அதனால் நன்மை தீமை என்ற இரண்டுமே கிட்டியது. கடந்த 75 வருடங்களில் என்ன செய்தோம் என்று இன்று சிலர் கேட்கின்றனர். நாங்கள் என்ன சொன்னோம், செய்தோம் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது.

 

அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். அன்றைய அரசாங்கங்கள் இந்த நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தின. நல்லதை போன்றே அவதூறுகளையும் ஏற்றுக்கொண்டோம். சில கட்சியினரை போன்று நாங்கள் வரலாறுகளை மறப்பதில்லை.

எமது வரலாறு ஒரு இடத்திலும் வெறுமையானதாகவும் காணப்படவில்லை. நாங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் எப்போதும் நாட்டைப் பற்றியே சிந்தித்தோம்.

2022இல் நாட்டைப் பற்றியே சிந்தித்து செயற்பட்டோம். பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருக்கவில்லை. ஒருபுறம் பிரதமராவிருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன் பிறகு என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று அனுர திஸாநாயக்கவும் பிரதமர் பதவியை ஏற்கவில்லை.

இருவரும் ஓடிவிட்டார்கள். ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு ஆட்சி அமைத்தோம். நாட்டுக்காக அரசியல் கட்சிகளாக ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை காண்பித்துள்ளோம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். இன்று எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு வரிசைகள் இல்லை. ஆனால் நான் உருவாக்கிய ஒரே வரிசை
செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லப்போகும்
வரிசை மட்டும்தான்.

இந்தப் பயணத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அப்போது நாங்கள் அரசியல் ரீதியாக எதிர் தரப்பினராக இருந்தாலும், எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது.

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் சகலரையும் நாம் அறிவோம். சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன்” இவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment