TamilsGuide

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை - எலான் மஸ்க் கடும் கண்டனம்

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.

சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனையடுத்து, பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் எக்ஸ் ஆப்பை தடுக்கும் தொழில்நுட்பத் தடைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் VPN போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸ் ஆப்பை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்தார்.

பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டில் எக்ஸ் ஆப்பை 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment