TamilsGuide

ரகசியமாக பிரித்தானியா திரும்பிய ஹரி - ஒரே நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமுடன் பங்கேற்பு

ரகசியமாக பிரித்தானியா திரும்பிய ஹரி... ஒரே நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமுடன் பங்கேற்பு 

உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி இன்றிணைந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றே கூறப்படுகிறது. இளவரசி டயானாவின் மைத்துனர் லார்ட் ராபர்ட் ஃபெலோஸ் என்பவர் மரணமடைந்துள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கிலேயே எதிரும் புதிருமான சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இளவரசி டயானாவின் சகோதரியை திருமணம் செய்துகொண்டவர் லார்ட் ராபர்ட் ஃபெலோஸ். 1990 முதல் 1999 வரையில் எலிசபெத் ராணியாரின் தனிப்பட்ட செயலராக செயல்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, ராணியாரின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய நபர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். Snettisham பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் அருகிலேயே லார்ட் ராபர்ட் ஃபெலோஸ் தம்பதி வசித்து வந்துள்ளது.

இந்த நிலையில், லார்ட் ராபர்ட் ஃபெலோஸ் காலமானதை அடுத்து இறுதிச்சடங்கில் வில்லியம் - ஹரி சகோதரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இறுதிச்சடங்கு நடந்த தேவாலயத்தில் இருவரும் இருவேறு இடங்களில் அமர்ந்திருந்தனர்.

மட்டுமின்றி, ஹரி அமெரிக்காவில் இருந்து திரும்புவது கடினம் என்றும், வாய்ப்பில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் நெருங்கிய குடும்ப உறுப்பினர் தெரிவிக்கையில், இளவரசர்கள் இருவரும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.

ஹரி பிரித்தானியா திரும்பியது வில்லியம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேவாலயத்தில் சடங்குகள் முடிவுக்குவரும் நிலையிலேயே இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இரு இளவரசர்களும் சடங்குகளில் கலந்துகொண்டிருந்தாலும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை, தங்களுக்கான இடைவெளியை காத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு வெளியேறி ஹரி - மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறியதன் பின்னர் சகோதரர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் ராணியாரின் மறைவுக்கு பின்னர், சில நிகழ்ச்சிகளில் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மேலும், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் இருவரும் ஒரே அறையில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகவில்லை என்றே கூறப்படுகிறது. 
 

Leave a comment

Comment