TamilsGuide

தப்பிப் பிழைப்பாரா தாய்லாந்தின் புதிய தலைமை அமைச்சர்?

தாய்லாந்து நாட்டின் புதிய தலைமை அமைச்சராக பீற்றர்ங்ரான் சினாவாத்ரா பதவி ஏற்றுள்ளார். 37 வயதில் பதவியேற்றுள்ள தொழிலதிபரான இவர் தாய்லாந்தின் மிக இளவயது தலைமை அமைச்சராக உள்ள அதேவேளை சினாவாத்ரா குடும்பத்தில் இருந்து தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நான்காவது உறுப்பினராகவும் உள்ளார். அது மாத்திரமன்றி தாய்லாந்தின் இரண்டாவது பெண் தலைமை அமைச்சராகவும் இவர் விளங்குகிறார். பியூ தாய் கட்சி என அறியப்படும் 'தாய்லாந்துக்கான கட்சி'யின் தலைவியாக உள்ள இவர் 2021ஆம் ஆண்டிலேயே அரசியலில் பிரவேசித்தவர் ஆயினும் தனது குடும்பச் செல்வாக்குக் காரணமாக

மிக விரைவிலேயே அரசியலில் முன்னேற்றம் கண்டு தற்போது தலைமை அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார்.

தாய்லாந்தின் 31 ஆவது தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மிகப் பெரும் செல்வந்தரான பீற்றர்ங்ரான் 21 தொழில் நிறுவனங்களின் உரிமையாரளராகவும் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

அரச குடும்ப செல்வாக்குடன் கூடிய ஆட்சி முறையைக் கொண்ட தாய்லாந்தின் அரசியலில் படைத்துறையின் தலையீடு அதீதமானது. பீற்றர்ங்ரானின் தந்தையாரான தொழிலதிபர் தக்சின் சினாவாத்ரா 1998ஆம் ஆண்டில் தாய் ராக் தாய் கட்சியை ஆரம்பித்தார்.2001இல் ஆட்சியைப் பிடித்த இவர் 2006இல் நடைபெற்ற ராணுவச் சதி நடவடிக்கை காரணமாகப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இந்தக் கட்சி 2007 மே மாதத்தில் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி என்ற பெயரில் தொடங்கப்பட்ட கட்சி 3 மாதங்கள் மாத்திரமே நீடித்தது. இதனைத் தொடர்ந்தே 2007 செப்டெம்பரில் பியூ தாய் கட்சி தொடங்கப்பட்டது.

2011இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியூ தாய் கட்சி முதல் தடவையாகப் போட்டியிட்டது. தக்சின் சினாவாத்ரா அவர்களின் இளைய சகோதரியான யின்குளுக் சினாவாத்ரா தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைமை அமைச்சரானார். 2014இல் நடைபெற்ற ராணுவச் சதி நடவடிக்கை காரணமாக இவரது பதவியும் பறிபோனது. தக்சின் சினாவாத்ராவின் மற்றொரு சகோதரியின் கணவரான சொம்சாய் வொங்சவாற் 2008 செப்டெம்பர் 18 முதல் டிசம்பர் 2 வரை மிகக் குறுகிய காலம் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார்.

தாய்லாந்து அரசியலைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது. அரச குடும்பத்தின் அங்கீகாரம் இன்றி அந்த நாட்டில் எதுவும் நிகழ்ந்து விடாது. தவிர  இராணுவத்தின் மறைமுகக் கரம் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்துள்ளது. இந்த இரண்டு அதிகார மையங்களையும் கடந்து சுயாதீனமாகச் செயல்படுவது அந்த நாட்டில் முடியாத காரியம்.

தற்போது புதிய தலைமை அமைச்சர் பதவியேற்கக் காரணமே இராணுவத் தலையீடுதான். இராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகாரணமாகவே முன்னைய தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படும் முதலாவது தலைமை அமைச்சர் அவரும் அல்ல.

கடந்த ஒரு வருடமாக தலைமை அமைச்சராகப் பதவி வகித்த ஸ்ரெத்தா தவிசின் ஆகஸ்ட் 14ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் உறுப்பினராக இடம்பெற்றிருந்த ஒருவர் முன்னர் குற்றவியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதைக் காரணம் காட்டியே அரசியலமைப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. தவிசின் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே பீற்றர்ங்ரான் புதிய தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

குடும்பச் செல்வாக்கு காரணமாக பீற்றர்ங்ரான்; இன்று தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தாலும் அவரது ஆட்சிக் காலம் சுமுகமாக அமையப் போவதில்லை என்பது கண்கூடு.

கடந்த வருட தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஏற்கனவே அங்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மக்களின் விருப்புக்கு மாறாகவே தற்போதைய கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது. தற்போதைய கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தாலும் அரச குடும்பத்தின் அனுசரணை மற்றும் படைத் துறையின் ஆதரவு என்பவை கிடைத்தாலும் வெகுமக்களின் ஆதரவு உள்ளதா என்பது கேள்விக்குறியே.

தற்போதைய அரசியல் நகர்வுகளை மக்கள் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறார்கள், எவ்வாறு பொறுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதிலேயே தாய்லாந்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இதேவேளை, தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்த கதியிலேயே உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கடந்த வருடத்தில் தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி 1.9 விழுக்காடாக இருந்தது. இந்த வருடத்தில் அது 2.8 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்ட போதிலும் அதற்கு வாய்ப்பில்லை என்கிறது கள நிலவரம். இந்த வருடம் ஆகக் குறைந்தது 2.4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியே எதிர்பார்க்கப்படுகின்றது என்கிறது உலக வங்கியின் எதிர்வுகூறல்.

தாய்லாந்து அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இராணுவ ஆட்சியே நடைமுறையில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே பொருளாதாரச் சரிவைக் கண்டிருந்தமை தெரிந்ததே. பெரும்பாலும் உல்லாசப் பயணத்துறையை நம்பியிருக்கும் தாய்லாந்தும் இந்தக் காலப்பகுதியில் மிகப் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருந்தது.

இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து மக்கள் ஆட்சி உருவாகினாலும் பொருளாதாரத் துறையில் பாரிய முன்னேற்றம் எதனையும் அவதானிக்க முடியவில்லை.

2023 யூலை முதலான காலப்பகுதியில் 2000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் அந்த நாட்டில் மூடப்பட்டுள்ளன. இதனால் 50,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து உள்ளனர். இன்னும் பல தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. இதில் உலகின் மிகப் பாரிய வாகன உற்பத்தி நாடுகளுள் ஒன்றான தாய்லாந்தின் வாகன உற்பத்தித் துறையும் அடக்கம்.

யப்பான் வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி தனது ஆலையை 2025 இறுதியில் மூடப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மற்றொரு யப்பான் நிறுவனமான சுபாரு இந்த வருட இறுதியில் தனது தொழிற்சாலையை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆலைகள் மூடப்படுவதன் மூலம் கணிசமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பது மாத்திரமன்றி நாட்டின் வருவாயிலும் நிச்சயமாக வீழ்ச்சி ஏற்படும்.

இத்தகைய நிலையில் புதிய தலைமை அமைச்சரின் பணி கடினமாதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனது ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து எழக்கூடிய உத்தேச எதிர்ப்பை அவர் முதலில் சமாளித்தாக வேண்டும். அடுத்ததாக சரிவிலுள்ள நாட்டின் பொருளாதாரத்தை அவர் நிமிர்த்த வேண்டும். இரண்டு பணிகளுமே சவால் நிறைந்தவை.

சினாவாத்ரா குடும்பத்தின் வாரிசு என்ற தகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு, தனது தந்தையாரின் முழு வழிநடத்தலில் இந்த இரண்டு சாவல்களிலும் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அதைத் தவிர தனது பதவியை அவர் காப்பாற்றிக் கொள்வது முக்கியமானது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்னர் தலைமை அமைச்சர்களாகப் பதவி வகித்த போதிலும் ஒருவர் கூட தமது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. 2027இல் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதுவரையான காலத்துக்கு தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதே பீற்றர்ங்ரானைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான்.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a comment

Comment