TamilsGuide

கட்சி தாவும் தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சஜித்

முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 21 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,

”சிலருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது.

சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டபோதும், முஸ்லீம்களின் ஜனாசாங்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கையை உயர்த்தியிருந்தனர்.

எனவே முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

மதுபானசாலை அனுமதி பத்திரங்களுக்காகவும், வைன் ஸ்டோர்ஸ்களுக்காகவும் மக்கள் கொடுத்த வரங்களை விற்பனை செய்திருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் தாவுகின்ற தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தற்பொழுது காணப்படுகின்ற சட்டங்களை மேலும் வலுப்படுத்தி தமக்கான ஆதாயத்திற்காக, கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பாலஸ்தீன மக்களுக்காக நாம் முன் நிற்பதோடு, நல்லடக்கமா எரிப்பதா எனும் பிரச்சினையில் அழுத்தங்களை கொடுத்து செயற்பட்டவர்கள் இனங்காணப்படுவார்கள்.

முஸ்லிம் மக்களுக்கு அதற்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்” என சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment