TamilsGuide

வாக்களிக்காவிட்டால் எதிா்காலத்தில் சிலிண்டரே இருக்காது – ஜனாதிபதி ரணில்

தேர்தல் பிரகடனங்களின்போது போலியான வாக்குறுதிகளை வழங்குவதானால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் ஊடாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” கூட்டணியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்த ஜனாதிபதி,

”நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன். அப்போது வரிசை யுகமும் உரத் தட்டுப்பாடும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவிய நாட்டையே காண முடிந்தது.

ஆனால் இன்று எந்த தட்டுப்பாடும் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தின் அடுத்த கட்டத்தையே ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்க போகிறது.

பொருளாதாரத்தைப் பலப்படுத்தியே வாழ்க்கை சுமையை குறைத்தோம். எாிவாயு, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன.

இந்த நிலையை தொடர்ந்து பாதுகாப்பதா அல்லது கைவிடுவதா என்ற கேள்வியே இப்போது இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

அவர்கள் அதற்கான வழிகாட்டல்களை வழங்குவர். மறுமுனையில் ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் சலுகைகயை வழங்குவதாக உறுதியளிக்கின்றன.

பொருட்களின் விலையைக் குறைக்கப் போதாகவும் கூறுகிறார்கள். சலுகை வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு நாட்டின் வருமானத்தை குறைக்க முடியாது.

ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை கொள்கை பிரகடனத்தில் சொல்வேன்.

தொங்கு பாலத்தில் சென்ற பயணத்தை நிறைவு செய்வோம் என்று நாம் கூறும்போது, பாலத்தின் இரு பக்கங்களையும் வெட்டிவிடுவோம் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.

எனவே நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வந்த குழுவுடன் பயணிப்பதா அல்லது சவால்களை ஏற்றுகொள்ளாமல் ஓடி ஒளிந்தவர்களுடன் பயணிப்பதா என்பதை நாட்டு மக்கள் தீர்தானிக்க வேண்டும்.

அதற்காகவே சிலிண்டரை சின்னமாக தெரிவு செய்தேன். சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment