TamilsGuide

இந்திய போர்க்கப்பல் இருக்கும் நேரம் இலங்கையில் சூழ்ந்த சீன போர்க்கப்பல்கள்

இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு நேற்று சென்றடைந்தது. 3 நாள் பயணமாக சென்றுள்ள அக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். 163 மீட்டர் நீளம் கொண்ட இந்திய போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது.

ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பல் இலங்கைக்கு செல்வது முதல் முறை ஆகும். இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8-வது தடவை ஆகும்.

இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா, கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை இந்திய போர்க்கப்பல் ஊழியர்கள் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு இந்திய கடற்படை பயிற்சி வழங்கி வருகிறது. இதுதவிர விமானத்தின் மேலாண்மையை இந்திய தொழில் நுட்பக்குழு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய போர்க் கப்பல் தனது பயணத்தை முடித்துக்கொண்டு 29-ந்தேதி இலங்கையில் இருந்து புறப்படுகிறது.

அதேபோல் சீனாவைச் சேர்ந்த 3 போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. ஹெபெய், இவுசிசான், க்ய்லியான்சான் ஆகிய போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூர மிட்டுள்ளன. இதில் மொத்தம் 1473 ஊழியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே இந்திய அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் சீன கடற்படை இருப்பு இந்தியாவிற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

சீன போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முன்பை விட நீண்ட காலம் சுற்றி வருகின்றன. இதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வரும்வேளையில் இந்தியா, சீனா போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு துறை முகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் சீனாவின் போர்க்கப்பல்கள், உளவுக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment