TamilsGuide

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வருடாந்த மாநாடு “இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கை தொழில் நிபுணத்துவ அமைப்பின் வருடாந்த சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த ஜனாதிபதி,

”மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் உக்கிரத்தன்மையை தெளிவுபடுத்தினார்.

அதிர்ஷ்டவசமாக, இரண்டு முக்கிய காரணங்களால் விரைவான பொருளாதார மீட்சியை அடைந்தோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக பாடுபட்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலமான குழுவொன்று என்னிடம் இருந்தது.

இரண்டாவதாக, தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம்.

நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான நமது ஒப்பந்தத்திற்கு இணங்குவது மிகவும் முக்கியமானது.

அந்த உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி,

ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பல்வேறு கடன் வழங்கும் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
அவற்றில் பெரிஸ் கழக நாடுகளும் இருந்தன.

சீனா வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் அல்லது அதிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துள்ள ஒப்பந்தமே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி. இது எங்களுக்கு கணிசமான நிவாராணத்தை அளித்துள்ளது.

எதையாவது தொடங்குவதில் தான் சவால் இருக்கிறது. அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

சரியான சூழல் இருந்தால் எமக்கு வெற்றி பெறலாம். நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment