TamilsGuide

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சி கவிழப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அதனை நிராகரித்திருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை மீரிகம நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச  மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள்  அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த அழைப்பை நான்  நிராகரித்திருந்தேன்.

அந்தப் பிரதமர் பதவிக்காக மக்கள் எனக்கு வாக்கு அளிக்கவில்லை. எனவே சந்தர்ப்பவாத பெருச்சாளித்தன அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை.

அந்தக் கொள்கையினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்க்குமாறு கூறிய போதும் அதனை நான் நிராகரித்தேன்.
அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்த நாட்டை சூறையாடி,
வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் ஒன்றாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

திருடர்களை பாதுகாக்கின்ற வாசல் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு நான் தயார் இல்லை.

எந்த ஒரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயல்படபோவதில்லை. சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது.

முழு நாடும், மலை போல் இருக்கும் கடனுக்குள் சிக்கி இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள 220 இலட்சம் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை வளப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரித்துள்ளார்.
 

Leave a comment

Comment