TamilsGuide

நாம் இருவர் முதல்  பாரதியின் படைப்புகள் கடந்து வந்த பாதை

தமிழகத்தின் ஒப்பற்றக் கவியான பாரதியின் பாடலை யாரையாவது பாடச்சொன்னால், நிச்சயம் அவர்கள் ஏதோவொரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் அதே ராகத்தோடு பாடுவார்கள். கூடவே அதே இசையுடன். சினிமாவின் சக்தி அதுதான். 3 மணிநேரம் திரையில் ஓடக்கூடிய சினிமா மக்களின் மனதில் உருவாக்கும் மாற்றமும் அதன் எதிர்வினையும் தமிழகத்தில் ஆச்சர்யமும் அலாதியுமானது. சினிமாவைத் தவிர்த்துவிட்டு தமிழர்களின் வாழ்வைச் சிந்திப்பது அபாயகரமானது. அப்படி ஓர் உறவு சினிமா உருவான காலத்திலிருந்தே உண்டு.
 பாரதியின் பாடல்கள் நூல் வடிவில் இன்றுவரை ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் மூலமாக வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவரது பாடல்கள் ஒரு சினிமாவில் இடம்பெற்றபோது தமிழக மக்கள் ஆனந்தமும் ஆச்சர்யமும் அடைந்தார்கள். தேர்ந்த இசையில் பாரதியின் பாடல்கள் தங்கள் காதுகளில் விழுந்தபோது ஆனந்தக்கூத்தாடி மகிழ்ந்தார்கள். திரைப்படத்தில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த பாரதியின் பாடல்களை அந்நாளில் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்தனர். பாரதியின் பல பாடல்கள் இடம்பெற்றதால் புகழ்பெற்ற அந்தத் திரைப்படம் 'நாம் இருவர்'. 1947-ல் வெளியான இப்படத்தைத் தயாரித்தது ஏவி.எம் நிறுவனம். ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்கு நிகராகத் தென்னிந்திய திரையுலகில் பொன்விழா கண்ட ஒரே நிறுவனம் ஏவி.எம் நிறுவனம். 
காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்து படங்களைத் தயாரித்துவந்த மெய்யப்பன் என்ற இளம் தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட சிறு நஷ்டத்தால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஏவி.மெய்யப்பன் என்கிற தன் பெயரை சுருக்கி ஏவி.எம் ஸ்டூடியோ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னாளில் புகழ்பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டு சிறந்த பொழுதுபோக்கு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது ஏவி.எம்! அந்நாளில் திரைப்படத்துறையில் இயங்கிவந்த  தேசபக்தி கொண்ட கலைஞர்கள் பலர் தாங்கள் சார்ந்த திரைப்படங்களின் மூலம் தேசபக்தியை ஊட்டும் திரைப்படங்களை எடுத்துவந்தனர். காந்தியவாதியான மெய்யப்பனுக்கும் அப்படி ஓர் எண்ணம் இருந்தது. 
அதற்கான கதை ஒன்றைத் தேடிவந்த சமயத்தில்தான் சென்னை ஒற்றைவாடை நாடகக்கொட்டகையில் கலைவாணர் என்.எஸ்.கே நாடக சபையினர் நடத்திவந்த 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை ஏவி.எம் பார்க்க நேர்ந்தது. 'தியாக உள்ளம்' எனப் பிரபல இயக்குநர் நீலகண்டனால் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை நீலகண்டனிடமிருந்து வாங்கி  'நாம் இருவர்' எனத் தலைப்பு மாற்றி என்.எஸ்.கே நாடக சபை நடத்தி வந்தது. நாடகம் பெரு வெற்றி. நாடகத்தின் வசனங்களும் அதன் காட்சியமைப்புகளும் ஏவி.மெய்யப்பனை வெகுவாகக் கவர்ந்தது. நாடகத்தில் கதைக்கு ஏற்ற இடங்களில் இடம்பெற்றிருந்த 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே' போன்ற பாடல்கள் நாடகத்துக்கு இன்னும் உணர்ச்சியைக் கூட்டியிருந்தது. நாடகத்தின் கதையை எழுதி இயக்கிய ப.நீலகண்டனை அழைத்துப் பாராட்டிய ஏவி.எம், நாடகத்தை தான் படமாக எடுக்கவிருக்கும் விருப்பத்தையும் தெரிவித்தார். 3,000 ரூபாயில் ஒப்பந்தம் உருவானது. நீலகண்டனை தனக்கு உதவி இயக்குநராகவும் அமர்த்திக்கொண்டார். கதாநாயகன் அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கம். கதாநாயகி டி.ஏ.ஜெயலட்சுமி. உலகப்புகழ் நடனமேதை குமாரி கமலாவும் இதில் நடித்திருந்தார்.
தேவகோட்டை ரஸ்தாவில் கழனிக்காடாக இருந்த ஓர் இடத்தைப் படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக ஒரு ஸ்டூடியோவை நிர்மானித்து 3 மாதங்களில் இந்தப் படத்தை எடுத்துமுடித்தார் ஏவி.மெய்யப்பன். 
புராணப் படங்களும் மாயாஜாலப் படங்களும் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த நேரத்தில், தேசபக்தியை வளர்க்கும் சமூகப்படமாக வெளிவந்த படம் 'நாம் இருவர்.' சுதந்திர வேட்கை நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலகட்டமான 1946-ம் ஆண்டின் இறுதியில் 'நாம் இருவர்' படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. 
 காரைக்குடியில் அப்போது லேப் வசதி கிடையாது என்பதால், பகல் முழுவதும் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஃபிலிம்களை அன்றிரவு போட் மெயில் ரயிலில் சென்னைக்கு அனுப்பிவைப்பார் ஏவி.எம். அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தயாரானது படம். தேசபக்திப் படம் என்பதால் வசனங்கள், காட்சிகள் அதற்கேற்றவகையில் கதையில் சேர்க்கப்பட்டன. அந்த வரிசையில் புரட்சிகரமான வரிகளைக்கொண்ட பாடல்களைப் படத்தில் சேர்க்க விரும்பினார். அப்போது, கனல் தெறிக்கும் தன் பாடல்களால் தமிழர்களால் தேசிய உணர்ச்சிகளை ஊட்டிய பாரதியின் பாடல்களைப் படத்திலும் இடம்பெறச்செய்தால் என்னவென்று 'மேனா' என்கிற ஏவி.எம் செட்டியாருக்கு ஒரு யோசனை உதித்தது. தன் ஆசையை நிறைவேற்ற உடனடியாகக் களத்தில் இறங்கினார்.
ஆனால், பாரதியின் பாடல்களைப் பயன்படுத்துவதில் இரு சிக்கல்கள் இருந்தன. ஒன்று அது பிரிட்டிஷ் காலம். மற்றொன்று பாரதியின் பாடல்களின் ஒலிப்பதிவு உரிமை பாரதி குடும்பத்தாரிடம் இல்லாதது.

அப்போது, 'சுராஜ்மல் அண்ட் சன்ஸ்' என்ற நிறுவனம் பாரதியின் பாடல்களைத் தங்கள் இசைத்தட்டு கம்பெனி மூலம் வெளியிட உரிமை பெற்றிருந்தது. அதாவது, பாரதியாரின் பாடல் ஒலிப்பதிவு உரிமையை பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் மூலம் 600 ரூபாய்க்கு பெற்றிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது வெளியிடப்படவில்லை. கொஞ்சநாளில் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. ஆனாலும், உரிமை அவர்களிடம் இருந்தது. இதையறிந்து அவர்களை அணுகினார் ஏவி.எம். ஆனால், சுராஜ்மல் பாரதியின் பாடல் உரிமத்துக்கு 10,000 ரூபாய் கேட்டு அதிசயிக்கவைத்தார். 40-களில் பத்தாயிரம் என்பது இன்றைக்கு லட்சக்கணக்கான மதிப்பு. ஆனாலும், பாரதியாரின் பாடல்களைத் தம் படத்தில் இடம்பெறவைக்க வேண்டும் என்ற ஆசையில் எந்தப் பேரமும் இன்றி உரிமையை வாங்கினார். 
'நாம் இருவர்' படம் 1947 ஜனவரியில் பொங்கல் தினத்தன்று மதுரையில் ரிலீஸானது. 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, கண்ணில் தெரியுது ஒரு தோற்றம், சோலை மலரொலியோ உனது சுந்தரப் புன்னகைதான், வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நானுக்கு, வெற்றிஎட்டுத்திக்குமெட்டக் கொட்டு முரசே' ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன. தங்கள் தேசியக் கவியின் பாடல்களைத் திரையில் நாயகனும் நாயகியும் பாடக்கேட்டு உணர்ச்சிகரமாகியது தமிழ்க்கூறும் நல்லுலகம். பத்திரிகைகளும் தமிழ்ச்சான்றோர்களும் ஏவி.எம் செட்டியாரைப் புகழ்ந்துத் தள்ளினர். பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே நாடு சுதந்திரமடையும் நன்னாள் வந்தது, 'நாம் இருவர்' படத்துக்கு இன்னுமொரு சிறப்பு.
'பாரதியாரின் பாடல்கள் இந்தளவு மக்களை கவர்ந்திருப்பதால், இப்படம் மெய்யப்பனுக்கு பெரும் வெற்றியைத்தேடித்தரும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்' என கல்கி விமர்சனம் எழுதியிருந்தார்.
'நாம் இருவர் - படத்தைப் பார்த்தேன் அப்படியே பிரமித்துவிட்டேன்' என ஏவி.எம்-க்கு கடிதம் எழுதி பாராட்டினார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். 
பாரதி பாடல்களின் உரிமம் குறித்த பிரச்னையால் அதன் பின்னரும் அரிதாகவே சினிமாக்களில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றன. உண்மையில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்திரைப்படம் 'நாம் இருவர்' அல்ல... 1935-ல் வெளியான டி.கே.எஸ் சகோதரர்களின் 'மேனகா' திரைப்படம்தான் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்படம்! அதுவும் சாதாரணமாக இடம்பெற்றுவிடவில்லை. அதற்குப்பின்னணியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு. 
1926 பொதுத்தேர்தலில் வெளியான குழப்பமான முடிவுகளுக்குப்பின் டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில், சென்னை மாகாணத்தில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்த பர்மாவில் ராஜதுவேஷ கருத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறி பாரதியின் 'ஸ்வதேச கீதங்கள்' பாடல் நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. அது 1928 ஆகஸ்ட் 7-ம் நாள். அதே ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதி சென்னை ராஜதானியிலும் பாரதியின் பாடல்களைத் தடைசெய்வதாக உத்தரவு பிறப்பித்தது சென்னை மாகாண அரசு.
உச்சகட்டமாக பாரதியின் பாடல் நூல்களைப் பறிமுதல் செய்தும் உத்தரவிட்டது சென்னை மாகாண மாஜிஸ்திரேட் நீதிமன்றம். இதைக் கண்டித்து 1928 சென்னை சட்டசபையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி. அவர் உள்ளிட்ட 76 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களில் பனகல் மகாராஜா, பி.டி ராஜன், டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நீதிக்கட்சித் தலைவர்களும் முத்துலட்சுமி ரெட்டியும் அடக்கம்.
தடையை ஆதரித்து 8 ஆங்கிலேய உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 வாக்குகள் பதிவாகின. முதலமைச்சர் உள்ளிட்ட 15 பேர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். தீர்மானம் வெற்றிபெற்றது. அதேசமயம் இந்தத் தடை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் 'பாரதியின் பாடல்கள் தேச விரோதமானவை அல்ல' எனத் தீர்ப்பு வெளியானது. வெள்ளையர்களால் இந்தத் தோல்வியை ஏற்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்றபடி எதையும் வளைத்துக்கொள்ளும் சுபாவம்கொண்ட அவர்கள் முள்ளை முள்ளால் எடுக்க முற்பட்டனர். 
ஆம்... அவசர அவசரமாகத் திரைப்படத் தணிக்கைச் சட்டம் மூலமாக விடுதலை உணர்வு பாடல்களைத் தணிக்கை செய்தனர். இதனால், பாரதியின் பாடல்களைத் திரைப்படங்கள் நாடகங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.
பாரதியின் பாடல்களுக்கு ஆங்கிலேய ஆட்சியில் கடும் கட்டுப்பாடு இருந்தாலும் முதன்முதலாக அந்தக் கட்டுப்பாட்டைத் துணிச்சலுடன் உடைத்தது, மேனகா திரைப்படம்.சிறந்த தேசபக்தர்களான டி.கே.எஸ் சகோதரர்கள் தயாரித்த இந்தத் திரைப்படத்தில், “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி, வாழி வாழியவே'' என்ற பாரதியின் பாடல் இடம்பெற்றிருக்கிறது. படத்தின் கதைக்கும் பாரதியின் பாடலுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என்றாலும் பாரதியின் பாடலை இடம்பெறச் செய்வதற்காகப் பள்ளி மாணவர்கள் அனைவரும் கூடி இந்தப் பாடலைப் பாடுவதாகச் சாமர்த்தியமாக நுழைத்திருந்தார் இயக்குநர் ராஜாசாண்டோ. படத்தின் பாட்டுப்புத்தகத்தில் பாடலாசிரியர் வரிசையில் பாரதியின் பெயரையும் துணிச்சலாக வெளியிடச்செய்தார் டி.கே.சண்முகம். பாரதியின் பாடல்களை முதன்முதலில் தங்களது தேசபக்தி நாடகத்துக்குப் பயன்படுத்திய பெருமையும் டி.கே.எஸ் சகோதரர்களையே சாரும்.
பாரதியின் பாடல் இடம்பெற்ற இரண்டாவது திரைப்படம், 1937-ம் ஆண்டு வெளியான 'நவயுகன்' அல்லது 'கீதாசாரம்'. டி.கே.எஸ் சகோதரர்களின் துணிச்சல் இந்தப் படத் தயாரிப்பாளருக்கு இல்லை. பாடலைப் பயன்படுத்திக்கொண்டாலும் படத்திலோ பாட்டு புத்தகத்திலோ எங்கும் பாரதியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இதன்பிறகு, பாரதியின் பாடல்களின் உரிமம் சட்டப்படி அவர்களது குடும்பத்தாருக்கு உரியது என அறியப்பட்டதால், பரவலாக சினிமாவில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. அல்லது முயற்சி எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில்தான் 1946-ம் ஆண்டு 'நாம் இருவர்' திரைப்படம் வெளியாகி பாரதியின்  பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. பாரதி பாடல்கள் குறித்த ஞானம் இல்லாத பாமரர்களையும், பாடல்களை முணுமுணுக்க வைத்தது 'நாம் இருவர்' படம். பாரதியின் பாடல்கள் அதிகம் பேசப்படக் காரணமான சினிமா என்று 'நாம் இருவர்' படத்தைச் சொல்லலாம். 
திரைப்படங்களில் பாரதி பாடல்களைப் பரவலாக எடுத்துச் செல்வதில் இருந்த சிக்கலைப் போன்றே அவரது படைப்புகளை வெளியிடுவதிலும் உரிமம் குறித்த பிரச்னை இருந்துவந்தது.
பாரதியின் காலத்துக்குப் பின் செல்லம்மாளுக்குப் பொருளாதார நெருக்கடி வந்தது. இதையடுத்து செல்லம்மாளே தனது உறவினர் ஹரிஹர ஷர்மாவுடன் இணைந்து 'பாரதி ஆசிரமம்' என்ற பதிப்பகம் வாயிலாக பாரதியின் படைப்புகளை வெளியிட்டுவந்தார். ஆனால், பலன் ஒன்றுமில்லை. பொருளாதார நெருக்கடிக்காக செல்லம்மாள், பாரதியார் படைப்புகளின் உரிமையை விற்க முன்வந்தும் யாரும் 3,500 ரூபாய்க்கு மேல் தரத் தயாரில்லை. பாரதியின் நண்பர்களில் ஒருவரான வை.சு.சண்முகம் பாரதியின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில், 10 ஆயிரம் ரூபாய்க்கு தானே  உரிமத்தைப் பெற்றுக்கொண்டு பாரதியின் படைப்புகளை வெளியிட முயற்சி எடுத்தார். ஆனால், பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி கைகூடவில்லை.
இதனிடையே பாரதி ஆசிரமம் வெளியிட்டு விற்கப்படாத பாரதியின் நூல் பிரதிகளின்பேரில் ஹரிஹர ஷர்மா, பாரதி மகள் திருமணத்துக்காக 2,000 ரூபாய் கடன் பெற்றார். இந்தச் சமயத்தில்தான் பாரதியின் படைப்பு உரிமை அவரது குடும்பத்தாரிடமே இருக்கும்படியாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது ஹரிஹர ஷர்மா, பாரதியின் தம்பி விஸ்வநாதன் மற்றும் சகுந்தலாவின் கணவர் நடராஜன் மூவரும் 'பாரதி பிரசுராலயம்' என்ற பெயரில் தாங்களே பாரதியின் படைப்புகளை வெளியிடுவது என முடிவானது.
அதன்படி பாரதியின் மொத்தப் படைப்புகளின் உரிமையை அவரது மனைவி செல்லம்மாள், பாரதி பிரசுராலயத்துக்கு 1931-ம் ஆண்டு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். பாரதியின் இளைய மகள் சகுந்தலா திருமணத்துக்காக அளித்த தொகை 2,000 போக மீதத்தொகையை சில தவணைகளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால்,  சில ஆண்டுகளிலேயே பாரதி பிரசுராலயம்  ஒப்பந்தபடி நடந்துகொள்ளவில்லை என பிரச்னை கிளப்பினார் செல்லம்மாள் பாரதி. பாரதியின் மொத்த படைப்புகளின் உரிமையையும் இழந்துவிட்டதோடு போதிய வருவாயும் இன்றி அவதிப்பட்ட செல்லம்மாளுக்காகப் பல சான்றோர்கள் குரல் கொடுத்தனர். இதனால் பாரதி பிரசுராலயத்தில் குழப்பம் உருவானது. ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தனர். இறுதியாக விஸ்வநாதன் மட்டுமே பாரதி பிரசுராலயத்தை நடத்தினார்.
பாரதியின் படைப்பு உரிமம் குறித்த பிரச்னை பல காலங்களாகத் தொடர்ந்து வந்தபோது பாரதியின் படைப்புகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற குரலும் தமிழத்தில் வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது. கல்கி போன்ற பிரபலங்கள் அதை அழுத்தமாக வலியுறுத்தினர். உரிமைப் பிரச்னையால் பாரதியின் படைப்புகள் பரவலாகப் போய்ச் சேராமல் இருப்பதாக அவர்கள் வாதம் வைத்தனர்.
நாளுக்கு நாள் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுவந்த நேரத்தில், 1949-ம் ஆண்டு பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படுவதாக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறிவித்தார். பாரதி பிரசுராலயத்திடமிருந்து பதிப்புரிமையை விலைக்கு வாங்கியது தமிழக அரசு. செல்லம்மாளுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் பாரதியின் இரு மகள்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்கியது.
பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையான தகவல் வெளியானதும் தமிழக அரசின் கடிதத்தை எதிர்பார்த்திராமல், தானே முன்வந்து தன்னிடம் இருந்த பாரதி பாடல்கள் ஒலிப்பதிவு உரிமையை எந்தப் பிரதிபலனுமின்றி அரசிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.!
பாரதியின் படைப்புகள் அரசுடைமையானது. முன்பு வெள்ளையர்களின் சட்டச்சிறை பின்னர் தனிமனிதர்களின் வீட்டுச்சிறை என முடங்கிக்கிடந்த பாரதி முற்றாக விடுதலையானார். சிறு பதிப்பகங்கள் முதல் பிரபல பதிப்பகங்கள் வரை பாரதியை அடுத்தடுத்து தமிழுலகின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தின. பாரதியின் புகழ்பரவக் காரணமாகின இந்த நடவடிக்கைகள்.
தமிழ்த் திரைப்படங்களில் அஞ்சி அஞ்சி பாரதியின் பாடல்களைப் பயன்படுத்திய காலம் போய் தேசப்பற்று கொண்ட படைப்பாளிகள் காலந்தோறும் பாரதியின் பாடல்களைத் தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தினர்; பயன்படுத்தியும் வருகின்றனர். இன்றும் சமூகத்தின் சீர்கேடுகளைத் தன் சாட்டையால் வெளுத்தெடுக்க பாரதியின் பாடல்கள்தான் திரையுலகுக்குத் தேவைப்படுகிறது. 
காரணம்... பாரதி எழுதியவை வெறும் கவிதைகள் அல்ல; இந்த நாட்டின் விடுதலைக்கு மக்களிடம் விதைத்த விதைகள்!

 

ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை
எஸ்.கிருபாகரன்

Leave a comment

Comment