TamilsGuide

ஔவையார் திரைப்படம் உருவான கதை

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட படமான சந்திரலேகாவை 1948ல் எடுத்த அதே வாசன் தான் இரண்டாவது பிரமாண்ட படமாக ஒளவையாரையும் எடுத்து 1953ல் வெளியிட்டார். அதே சமயம் பல வருட உழைப்பு பிரமாண்ட செலவு ஆகியவற்றில் சந்திரலேகாவுக்கு சற்றும் சளைத்ததல்ல ஒளவையார். சந்திரலேகாவாவது ஆக்‌ஷன் மசாலா காட்சிகள்   நிறைந்த ஒரு படம் அதற்கு அவர் செலவழித்த ஆண்டுகளும் பணமும் சரியானது. ஆனால் ஒளவையார்  ஒரு கவி பாடும்  கூன் விழுந்த மூதாட்டிப் பெண்ணின் கதை. இதுக்கு  இத்தனை  வருடமும் செலவும் தேவையா? என்ற கேள்வி அக்காலத்தில் சினிமா தொழில் சார்ந்த அனைவரிடமும் இருந்தது. ஒரு சிலர் வாசன் பணத்தைக் கொட்டி படம் எடுப்பது வீண் வேலை என்றும் முணுமுணுத்தனர். ஆனாலும் வாசன் பிடிவாதமாக இருந்தார். ஒளவையார் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்குவதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.  ஒவ்வொரு நாளும் திரைக்கதையிலும் பாடல் மற்றும் இசையிலும் படப்பிடிப்பிலும், படத்தொகுப்பிலும், ஒலி சேர்க்கையிலும் அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணித்தார்.
அப்படி அவர் ஒளவையார் கதையில் களமிறங்க நேரிடையாக ஒரு காரணமும் இல்லை . அன்று என்னவோ திரை போக்குகளில்  நத்தார் பட்டினத்தார், காரைக்கால் அம்மையார்  போன்ற கவிஞர்களின்  வாழ்க்கைக்கு சினிமாவில் மவுசு இருந்தது. இதற்கு காரணம் துவக்க காலத்தில் படத்தின் வெற்றியை பாட்டுகளின் எண்ணிகையே  தீர்மானித்தது.  அத்தனை பாட்டுக்கும் கவிஞர்களுக்கு காசு கொடுத்து எப்படி மாள்வது? அதனால் இறந்த புலவர்களை பற்றிய படமெடுத்தால்   இருக்கவே இருக்கிறது அவர்கள் எழுதிய பாடல்கள்  ஒன்னுக்கு நூறாக  இசையமைப்பாளர்களிடம் அவற்றைக் கொடுத்தால் பாட்டுக்கு பாட்டும் ரெடி, கதைக்கு கதையும் ரெடி.
மக்களிடையேயும் அவை தொடர் வெற்றி பெற்றன. இந்த  சூழ்நிலை காரணமாகத்தான் வாசன் ஒளவையார் கதையை படமாக எடுக்க 1943 வாக்கில் முன் வந்தார். அவர் இந்த முடிவுக்கு வர இன்னொரு காரணம் . அவ்வை சண்முகத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற நாடகம்  ஒளவையார்.  சங்கரதாஸ் சுவாமிகள் , பம்மல் சம்பந்த முதலியாருக்கு பிறகு தமிழ் நாடக உலகை வளர்த்த மிகப்பெரிய ஆளுமை அவ்வை சண்முகம். அவர் எழுதிய பல நாடகங்களில் பெண் வேடங்களில் அவரே நடிக்கவும் செய்தார். அப்படி அவர் போட்ட வேடங்களில்  பிரசித்தி பெற்ற நாடகம்  ஒளவையார். அதில் தோற்றம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தனது இரண்டு முன் பற்களை அகற்றி, கீழ் உதட்டை உள்நோக்கி வளைத்து, ஒரு வயதான பெண்ணாகவே  மாறினார். இந்த நாடகத்தின் அபரிதமான வெற்றி தான் வெறும் டி.கே சண்முகமாக இருந்த அவரை அவ்வை சண்முகம் என அழைக்க வைத்தது.
சென்னையில் மட்டும் 96 முறை தொடர்ந்து இந்த நாடகத்தை அவர் நடத்த  அது அவருக்கு நிரந்தர முதுகுவலியைக் கொடுத்தது. 1948 ஆம் ஆண்டில், இந்த நாடகம் நடத்தி முடித்த கையோடு ஆம்புலன்சில் ஏறி முதுகுவலிக்கு   மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்படியான  அவ்வை சண்முகம் நாடகத்தின் வெற்றியும்  வாசன் அவர்கள் இந்த படம் எடுக்கும் முடிவுக்கு வர முக்கிய காரணம்.
T.K.சண்முகம்

படத்தை எடுக்கும்  முடிவுக்கு வந்த உடன் வாசன்  நேரடியாக  டி.கே சண்முகத்திடம் அணுகி படத்தில் நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் . காரணம் ஆண் பெண் வேடம் போட்டல் நாடகத்தில் ரசிப்பார்கள் ஆனால் சினிமாவில் ரசிக்க மாட்டார்கள் எனக் கூறி மறுத்துவிட்டார். தடை என்று வந்தாலே அதை உடை என்பதுதான் வாசனின் மந்திரம். உடனே அவர் ஒளவையாரை எடுத்தே தீர்வது என்ற முடிவுக்கு வந்தார்.  புராணக்கதைகளுக்கு ஏது உரிமை என நினைத்தாரோ என்னவோ அவ்வை சண்முகத்தின் திரைக்கதையை கோராமல் தன் ஆஸ்தான எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவை அழைத்து  ஒளவையார் பற்றி இன்னும் கூடுதல் புதிய தகவலுடன் புதிய திரைக்கதை எழுதி தரும்படி  உத்தரவிட்டார் . அப்போதே நாடகத்துக்கும் நம் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார் .  அதற்கேற்ப காட்சிகளில் பிரம்மாண்டம் தோன்றும்படி எழுதச் சொன்னார்
    அப்போது அவர் முன் இருந்த சவால் எப்படி அவ்வை சண்முகத்தின் ஒளவையாரை விடவும் பெயர் வாங்குவது  என்பதுதான். அப்போது தொடங்கிய எழுத்துப் பணிக்கு தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். இரண்டு வருட கடும் உழைப்புக்கு பின் திரைக்கதை முழு வடிவம் கண்டது .
இப்போது அவர்  முன் இருந்த இன்னொரு சவால் ஒளவையார் பாத்திரம் . அந்த ரோலில் யாரை நடிக்க வைப்பது, யார் நடித்தாலும்  அவ்வை சண்முகத்தை மிஞ்சும் வகையில் நடிக்க வேண்டும் வியாபாரத்திலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் , பலமாக மூளையை போட்டு கசக்கிய வாசன்  மனதில் பளிச்சென்று மின்னல் வெட்டினால் போல மனதில் தோன்றினார் கே.பி சுந்தராம்மாள். கிட்டப்பாவின் மனைவி கிட்டப்பா இறந்த பிறகு மேடையில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின் சில ஆண் வேடங்களில் நடித்து வந்தவர்  பெண் வேடங்களில் நடிக்கவில்லை.
கிட்டப்பக்குபின் யாருடைய ஜோடியாகவும் அவர் நடிப்பதை தவிர்த்து வந்தார் . ஆனாலும் அவர் பாடல்களால் மக்கள் மத்தியில் அவருக்கு மிக பெரிய பேரும் புகழும் இருந்தது. இதனால் வாசன் கே.பி.சுந்தராம்பாளை அணுகினார்.ஆனால் கே.பி.எஸ்சோ இனி நடிக்க போவதில்லை என்று கூறி மறுத்தார். ஆனாலும் வாசன் பிடிவாதமாக சுந்தராம்பாள் மறுக்கவே முடியாத வாய்ப்பை வழங்கினார் தனக்கு  ஒருவரிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் மறுக்கவே முடியாத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கு என்பது புகழ்பெற்ற வாசகம். எம்.பி.ஏ போன்ற வணிகம் சார்ந்த படிப்புகளில் கற்றுக்கொடுக்கப்படும் இந்த பிரபல சூத்திரம் காட்பாதர் திரைப்படத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது. ஆனால் வாசன் அவர்களோ எந்த எம்.பி.ஏ வகுப்பிலும் படிக்காதவர். ஆனால் அவர் மிகப்பெரிய முதலாளியாக தொழிலில் வெற்றி பெற்று இந்தியாவை அசர வைக்க காரணம் அவரிடம் இயல்பாகவே இருந்த வணிக மூளை.
அப்படித்தான் கே.பி.சுந்தராம்பாள் அவர்களை சம்மதிக்க வைத்தார். அவரை சம்மதிக்க வைத்து யாரும் கொடுக்க வர முடியாத அன்றைய சூழலில் இந்தியாவில் யாருமே வாங்காத அதிகபட்ச சம்பளமாக கே.பி.எஸ்சுக்கு ஒரு லட்சம் சம்பளம் பேசினார். அதன்படி இன்றைய மதிப்புக்கு 15 கோடி ரூபாய் ஒளவையார் போன்ற படத்துக்கு ஐம்பது வயதை கடந்த நரை தரித்த வயதான பெண்ணுக்கு 15 கோடி, இன்று கொடுத்தால் கூட அவரை அனைவரும் வினோதமாக பார்ப்பார்கள். ஆனால் வாசன் துணிந்து கொடுத்து ஒப்பந்தம் செய்தார் இப்படியாகத்தான் ஒரு லோ பட்ஜெட்  கதை  பிரமாண்ட மெகா பட்ஜெட் உயர்ந்தது.
1948ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை போட்டு ஒளவையாரின் படப்பிடிப்பு துவங்கியது. செலவுக்கு மேல் செலவுகள் இழுத்துக்கொண்டே போனது . வாசனும் அஞ்சாமல் படம் பிரமாண்டமாக வரவேண்டும் என்று கனவு கண்டார். காரணம் அப்போது அவருக்கு உண்டான திடீர் நெருக்கடி . அதுவரை  புராண படங்களுக்கு இருந்த மவுசு, இவர்  படம் துவங்கிய சில நாட்களில் மாறத்தொடங்கியது. அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் ராஜகுமாரி, மந்திரிகுமாரி, பொன்முடி என தொடர்ந்து சமூக புரட்சி பேசும் படங்களில் திராவிட இயக்க கருத்துக்கள் நெருப்பு பொறி பறந்தன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய திராவிட இயக்கத்தினருக்கு கிட்டிய மிகப்பெரிய வெற்றி வாசனுக்குள் எதிர்பார அச்சத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கி இருக்க  வேண்டும் அல்லது உடனிருக்கும் சினிமா வியாபாரிகள் அவருக்கு ஒளவையார் படம் இக்காலத்துக்கு ஒத்துவராது என கருத்து சொல்லியிருக்க வேண்டும். இப்படியான சமூக நெருக்கடிகளை மனதில் கொண்டோ என்னவோ ஒளவையார் படத்தை வெற்றி பெற வைத்து  தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என வாசன் முடிவெடுத்தார். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் முதல் பிரம்மாண்டம் என பெயரெடுத்த சந்திரலேகாவை அது மிஞ்ச வேண்டும் என யோசித்தார். ஆனால் கதையோ நாயகி ஒரு கிழவி கதையை விட்டு விலகாமலும்,  அதேசமயம் அது கண்னை கவரும் விதத்திலும் அமைய வேண்டும் என கொத்த மங்களம்  சுப்புவிடம் குடைய  எதார்த்தம் கெடாத பிரம்மாண்டம்  எப்படி என யோசித்ததன் விளைவு 
கடைசியில் அதற்கேற்றார் போல கதையில் ஒரு காட்சியும் இருந்தது. திமிர் பிடித்த மூன்று அரசர்கள் ஒளவையாருக்கு தொல்லை கொடுக்க அவர்களை சமாளிப்பதற்கு ஒளவையார் கோவிலுக்கு சென்று விநாயகரிடம் ஒரு கும்பிடு போட்டு கோரிக்கை வைக்கும் ஒரு காட்சி இருந்தது.  அதை கொஞ்சம் டெவலப் செய்து ஒளவையாரின் கோரிக்கையை ஏற்கும் விநாயகர் 100 யானைக் கூட்டத்தை அனுப்பி அந்த மன்னர்களில் ஒருவரது கோட்டையை இடிக்க அனுப்பி வைப்பது தான் அந்தக் காட்சி.
இந்த காட்சிக்குத் தேவையான 100 யானையை வரவழைத்துக் காட்சி படுத்தி விட்டால் அதை விட பிரம்மாண்டம் வேறென்ன இருக்க முடியும் என வாசன் முடிவெடுத்து காரியத்தில் இறங்கினார். இதற்கு 100 யானைகளை தேடி  ஜெமினி ஸ்டூடியோ குழு அங்குமிங்குமாக அலைந்த போது ஒரு தகவல் அந்தக் குழுவுக்கு கிடைக்க உடனே துறைமுகம் விரைந்தது, கூர்க்கில் சும்மா திரிந்து கிடந்த 100 யானைகளை  சென்னை துறைமுகம் வழியாக கப்பலில்  அந்தமானுக்கு  யானைகள்  கூட்டமாக கொண்டு செல்லப்படுவதாக வந்த செய்திதான் அது.   
இப்படி அந்தமானுக்கு  செல்லும் யானைகளை படப்பிடிப்புக்கு கொண்டு வருவது என்பது மலையைக் கட்டி கேசத்தில் இழுக்கும் விஷயம். ஆனால் வாசனால் அது சாத்தியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு  காரியத்தை அந்தக் காலத்தில் வேறு ஒரு தயாரிப்பாளர் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. வாசனால்  மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடிந்தது என்றால்  இதுதான் அவரது யானை பலம்.
இப்படியாக 100 யானைகளை ஸ்டூடியோவுக்கு கொண்டுவந்து  கோட்டையை செட் போட்டு அதை யானைகள் மோதி உடைப்பது போல பத்து நாட்கள் தொடர்ந்து படம் பிடித்தார் .
 அந்த 100 யானையை பத்து நாட்கள் பராமரித்த செலவில் மட்டும்  இன்று மூன்று படங்கள் எடுத்துவிடலாம். 100 யானைகளைக் குளிப்பாட்ட செலவான வான் நீர் மட்டுமே  ஒரு நாளைக்கு எவ்வளவு கேலன்கள் என கணக்கு போட்டு அதை பெருக்கிப் பாருங்கள்  அந்த நீரை கொண்டு வந்து நிரப்பி  போக்குவரத்து  ஊழியர்கள் செலவு என ஒவ்வொரு விஷயத்தையும் கணக்கு போட்டால் மலைத்து போய்விடுவோம்.
ஒரு கட்டத்தில் படம் முழுவதும் முடிந்து  இறுதியாக எடிட்டிங் டேபிளில் இரண்டு படங்களுக்கான ரீல்களை கொண்டு வந்து வைக்க  வாசன்  தான் உருவாக்கிய படைப்பு என உச்சி முகராமல்  படத்தொகுப்பாளரிடம் ஈவு இரக்கமில்லாமல்  தேவையற்ற காட்சிகளை வெட்டி எறிந்து கச்சிதமான வடிவத்துக்கு படத்தை வடிவமைக்குமாறு உத்தரவிட்டார். 
தொழில்நுட்ப பணிகள் முடிந்த பின் தன் ஸ்டூடியோவில் ஆனந்த விகடன்  ஊழியர்கள் அனைவரையும் கூட்டி அவர்களுக்கு படத்தைப் போட்டு காண்பித்தார் . படம் முடிந்தவுடன்  அனைவர் கையிலும் ஒரு ஊழியர் ஒரு துண்டு பேப்பரை கொடுத்து ஒளிவு மறைவில்லாமல்  படத்தை விமர்சிக்கும் படி கட்டளையிட்டார் . அப்படி எழுதப்பட்ட விமர்சனத்தில்  ஒன்று உங்கள்  படத்தை அப்படியே  தூக்கி கொண்டு பொய் வங்காள விரிகுடா கடலில் போட்டு விடலாம் என  துணிச்சலாக எழுதினார் . கதிர் எனும் ஊழியர், அவரை உடனே அழைத்து வரும்படி வாசன் கோவத்துடன்  உத்தரவிட்டு  இயக்குனர் கொத்தமங்கலம்  சுப்புவையும் அவர் வரும் போது  தன் அறையில் உட்கார வைத்தார். பயந்துகொண்டே வந்த கதிர் என்பவரிடம்  பொறுமையாக அவர் ஏன் அப்படி எழுதினார் என கேட்க படம் சுவாரசியமாக இல்லை என அவர் வெளிப்படையாக  கருத்து கூற, அதை ஏற்றுக்கொண்ட வாசன்   யோசித்து பின் மீண்டும் கொத்தமங்கலம் சுப்புவிடம்  மேலும் சில காட்சிகளை சேர்க்க சொல்லி மீண்டும் படப்பிடிப்பு நடத்த உத்தரவிட்டார்  
அதன்படி பண்டைத் தமிழ் மன்னன் பாரி  ஒளவையாருக்கு  பிரம்மாண்ட வரவேற்பை அளிப்பதாக  எழுதப்பட்டு ரூ. 1.5 லட்சம் செலவில் ஒரு முழு தெரு செட்  போடப்பட்டது.  10,000 இளைய கலைஞர்கள் மற்றும் பல வகையான நாட்டுப்புற நடனங்கள்  அந்த ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான காட்சி திரைப்படத்தை உயிர்ப்பித்தது.
படம் வெளியான போது எழுத்தாளர் கல்கி தனது பத்திரிகையில் ஒரு சிறந்த விமர்சனத்தை எழுதினார், இது அவரது முன்னாள் முதலாளி வாசனுடன் நல்லுறவுக்கு வழிவகுத்தது. வெலிங்டன் திரையரங்கிற்கு  ஒளவையார் படம் பார்க்க வந்த முதல்வர் ராஜாஜியை  விமர்சித்து  கல்கி தாக்கி  எழுத அதுவும் சேர்ந்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமானது .
இன்று எல்லோரும் ரிலையன்ஸ் அம்பானியின் வெற்றி சூத்திரமாக சொல்லும் எல்லாம், அன்று வாசன் அவர்கள் கடைபிடித்து தென்னிந்திய வணிக சாம்ராட்டாக வலம் வந்ததோடு மட்டும் அல்லாமல் மும்பை பட உலகையும் மிரள வைத்தார். இல்லாவிட்டால் திராவிட சினிமா பேரெழுச்சி பெற்ற இக்காலகட்டத்தில் எதிர் நீச்சல் போடும் அளவுக்கு இப்படி ஒரு படத்தை இவ்வளவு செலவு செய்து  துணிச்சலாக  எடுத்து  வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்று நிரூபித்தது அத்தனை சாதாரண விஷயமல்ல.
இதுபோன்ற சாகசங்கள் பலவற்றை  அவர் வாழ்க்கை முழுக்க செய்தார்.  இதனால்தான் இன்றும் அவர் சரித்திரத்தில் இடம்பிடித்து   போற்றப்பட்டு வருகிறார்.
வெகு காலத்திற்கு பிறகு, உலகத் தமிழ் மாநாட்டிற்கு கடற்கரையில் அவ்வை சிலையை வாசன் வழங்கினார். தற்செயலாக, சிலைக்கு செங்குத்தாக உள்ள சாலைக்கு அவ்வை சண்முகம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
 எழுத்தாளர். அஜயன் பாலா.

 

Leave a comment

Comment