TamilsGuide

1,700 ரூபாய் சம்பள விவகாரம் - ஜனாதிபதி அதிரடித் தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாவை சம்பளமாக வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று சம்பள சபையை கூட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

மனுஷ நாணயக்கார அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில் அமைச்சின் பொறுப்புகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் சம்பளம் வழங்கும் சபையுடன் இணக்கப்பாட்டுக்கு வர முயற்சிப்பதாகவும், தேவைப்பட்டால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விசேட சட்டங்களைக் கொண்டுவரத் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை 1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்கவிருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தற்போது ஜனாதிபதியே தொழில் அமைச்சராகவும் இருக்கின்ற நிலையில், இது சார்ந்த அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment