TamilsGuide

வலைத்தளங்களில் சினிமாக்கள்

வலைத்தள வெளியீடுகளுக்காக எடுக்கப்படும் மலையாளப்படங்களின் திரைக்கதையும் பாத்திரமாக்கலும் கச்சிதமாக இருக்கின்றன. பெரும்பாலும் குறிப்பான பின்னணியில் - குடும்பம் நிகழ்வுகளைக் கதைப்பின்னலாக்கி அறிமுகம், வளர்ச்சி, உச்சம், முடிவு என்ற எளிய வடிவத்தில் திரைக்கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தோடு அதில் நடிப்பதற்கான தேர்ந்த நடிகர்கள் மலையாள சினிமாவுக்குள் இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தன்மையாக இருக்கிறது.  

இந்தப்புரிதலும் கருத்தோட்டமும் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டவைதான். இதே கோணத்தில் அண்மையில் தமிழில் எடுக்கப்பட்ட கருடன், குரங்குப்பெடல், சட்னி சாம்பார், குற்றம் குற்றமே முதலான படங்களைப் பார்த்தேன். 

இந்தப் படங்களில் சில திரையரங்குகளில் வந்திருக்கலாம். ஆனால் சட்னி சாம்பார் வலைத்தளத்திர்காகவே எடுக்கப்பட்டது என்பதை அதன் திரைக்கதை ஆக்கமே காட்டியது. அத்தோடு அதில் நடித்தவர்களும் பொறுப்போடும் பாத்திரங்களின்  உணர்வு ஓர்மையை உணர்ந்தவர்களாகவும் வெளிப்பட்டிருந்தார்கள். ஆனால் யோகிபாபு பாத்திரத்தை நாயகத்தன்மை கொண்ட பாத்திரமாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட வசனங்களையும் காட்சித்துணுக்குகளையும் தவிர்த்திருக்க வேண்டும்.

குரங்கு பெடல் - கால் நூற்றாண்டுக்காலத்திற்கு முந்திய தமிழ்நாட்டுக் கிராமிய வாழ்வில் மிதிவண்டியின் இடமும் பால்யகால நினைவுகளும் என்பதால் பார்க்க வேண்டிய படமாக இருந்தது. அந்தப்படத்த்தின் காட்சிகளில் சில எனது நினைவுகளையும் கிளர்த்தின என்பது உண்மையென்றாலும் திரைக்கதையில் கச்சிதமிலாமல் பல காட்சிகள் நீண்டுகொண்டே இருந்தன. மிதிவண்டியைக் காட்சிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தது போலக் காட்சிகளின் உருவாக்கம் இருந்ததைத் தவிர்த்திருக்கவேண்டும். 

இவ்விரண்டு படங்கள் அளவுக்குப் பேசுவதற்கு எதுவும் இல்லாத படங்கள் கருடனும் குற்றம் குற்றமேயும். இத்தனைக்கும் சினிமாவில் நல்ல படங்கள் தந்த வெற்றி மாறனும் பாரதிராஜாவும் பங்கெடுத்துக் கொண்ட படங்கள் இவ்விரண்டும்.  இரண்டு படங்களின் இயக்குநர்களுமே எல்லாப் பாத்திரங்களுக்கும் பொருந்தமான - நடிப்புத்திறன் கொண்ட நடிகர்களைத் தேர்வு செய்து, நடிக்கச் செய்ய வேண்டும் என்ற நினைப்புக் கொண்டவர்களாக வெளிப்படவில்லை. சில பாத்திரங்களுக்கு அறிமுகமான நடிகர்களைத் தேர்வுசெய்து காமிரா முன்னால் நிறுத்திவிட்டால் பார்வையாளர்கள், அந்த நடிகர்களுக்காகப் படத்தைப் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது.  கருடனில் சூரியின் நடிப்பே பல இடங்களில் பொருந்தவில்லை. புதிய நடிகர்களின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பார்ப்பவர்களைப் பொருட்படுத்தாத காட்சி அமைப்புகளும் நடிப்பும் ஒட்டவிடாமல் விரட்டுகின்றன. 

குற்றம் குற்றமே படத்தைப் புலன் விசாரணைபடமாக எடுக்க நினைத்துக்கிராமப்பஞ்சாயத்துக் காட்சிகளால் வரிசையாக்கியிருக்கிறார் இயக்குநர். பாரதிராஜாவை புலன் விசாரணை அதிகாரியாக்கிவிட்டுக் கிராமத்து மரத்தடியிலும் சாலையோரத்திலும் உரையாடல் செய்யும் மனிதாபமான மனிதராக உருவாக்கி நடக்க விட்டிருக்கிறார். இப்படியொரு பாத்திரத்தை அவர் எப்படி ஏற்றுக்கொண்டு நடித்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அதன் அளவைத் தாண்டிப்போகும்போது குறைக்கவேண்டும் என்பதை அறியாமல் நீட்டியிருக்கிறார்கள். 

இன்னும் சில தமிழ்ப் படங்கள் வலைத்தளங்களில் இருக்கின்றன. எவ்வளவு முயற்சித்தும் பார்க்க முடியாமல் தள்ளி வைத்திருக்கிறேன்.

அ. ராமசாமி

Leave a comment

Comment