TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் பவித்ரா ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் பவித்ராவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பலர் தொடர்ச்சியாக ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தன்னுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலருடன் நீண்ட ஆலோசனைகளை நடத்திய பின்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்திரமற்ற நிலையில் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்தமையை அனைவரும் அறிவார்கள் என்றும் அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலானோரின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தால் நாம் நம்பியது போல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றார் என்றும் எனவே ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டனர் என்றும் அமைச்சர் பவித்திரா கூறியுள்ளார்.

எனவே, தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராக இருந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment