TamilsGuide

நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும்   சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 2005 முதல் இன்று வரையான காலங்களில் நூலக நிறுவனம் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவந்த ஆரம்ப கால பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளாந்தம் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள்  ஆவணப்படுத்தல் என்பது முக்கிய செயற்பாடாகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்காலத்தில் வெளிவரும்  பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை  சேகரித்து ஆவணப்படுத்தும் முகமாக  “வாசிகசாலை செயற்றிட்டம்” முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இணையவெளியிலே பத்திரிகைகளுக்கான‌ வாசிகசாலை போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இச்செயற்றிட்டம், நடு இலக்கிய சஞ்சிகையின் நிதி உதவியுடன் நூலகம் நிறுவன முகாமைத்துவத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
செயற்றிட்ட அடைவுகள்:
இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 59 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளிலிருந்து வெளிவரும் இலங்கை சார்ந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உள்ளடங்குகின்றன. குறிப்பாக இலங்கையிலிருந்து வெளிவரும் 21 பத்திரிகைகளும், 22 சஞ்சிகைகளும் அதேபோன்று பிறநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் உட்பட 15 ஆவணங்களும் ஆவணப்படுத்தப்பட்டு, இலகுவாகவும் இலவசமாகவும் அணுகத்தக்கவாறு இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.
வாசிகசாலை செயற்றிட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களைப்  போன்று, உங்களது பிராந்தியங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் இணைத்துக்கொள்ள முன்வாருங்கள். உங்களது பிராந்தியங்களில் வெளிவரும் அல்லது இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளையும் எமக்கு PDF வடிவிலோ அல்லது அவை குறித்த விபரங்களை தெரியப்படுத்தினால், அவற்றை எமது வாசிகசாலை வலைத்தளத்தில் இணைத்து, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உதவலாம்.
நூலக வலைத்தளத்தில் வாசிகசாலைப் பகுப்பினுள் இணைக்கப்பட்ட ஆவணங்களில் தவறவிடப்பட்ட ஆவணங்கள் தங்களிடமிருந்தால் அல்லது வேறு வழிகளில் கிடைக்கப்பெற்றால், எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஆவணப்படுத்தலினை பூரணப்படுத்தலாம்.  
தமிழ் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வமுள்ளோர் நூலகத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்துடன் இணைந்து கொள்ளவும்.
www.noolaham.org | www.noolaham.school | www.noolaham.media | www.noolaham.tech
தொடர்புகளுக்கு:
info@noolahamfoundation.org
noolahamfoundation@gmail.com
0094 21 223 1292 | 0094 77 898 3285
www.noolaham.foundation
 

 

Leave a comment

Comment