TamilsGuide

வள்ளலார் எழுதிய பக்தி பாடல் ஒன்றை மாற்றி காதல் பாடலாக எழுதி ஹிட் கொடுத்த கவிஞர் வாலி

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடலின் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, வள்ளலார் எழுதிய பக்தி பாடல் ஒன்றை மாற்றி காதல் பாடலாக எழுதி ஹிட் கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கண்ணதாசன் புகழின் உச்சத்தில் இருந்து காலக்கட்டத்தில் அவருக்கு எதிராக பாடல் எழுத தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வாலி. தொடர்ந்து பல தடைகளை கடந்து முன்னணி கவிஞராக மாறிய இவர், ஒரு கட்டத்தில் கண்ணதாசனுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அதே போல் கண்ணதாசன் எம்.ஜி.ஆர் பிரிவின்போது, தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலி பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றார். இந்த வாய்பை சரியாக பயன்படுததிய அவரும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, நடிகர் ஜெய்சங்கருக்காக எழுதிய ஒரு பாடலில், வள்ளலாரின் பக்தி பாடலை வைத்து காதல் பாடலாக எழுதியிருப்பார். 1978-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் கதை மற்றும் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வெளியான படம் வண்டிக்காரன் மகன். ஜெய்சங்கர், ஜெயச்சித்ரா, எம்.ஆர்.ராதா, மனோரமா, அசோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
அமிர்தம் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. அதே சமயம், மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே என்ற பாடல் இன்றும் பலர் விரும்பி கேட்கும் முக்கிய பாடலாக இருக்கிறது. இந்த பாடல் தமிழ் பாடலாக இருந்தாலும் ஹிந்துஸ்தானி பாணியில் எம்.எஸ்.வி இசையமைத்திருப்பார்.
காதல் பாடலான இந்த பாடலை, வள்ளலார் சிவபெருமானை பார்த்து பாடும், ‘’கோடையில் இளைப்பாறி’’ என்று தொடங்கும் பக்தி பாடலைத்தான் கவிஞர் வாலி காதல் பாடலாக மாற்றி எழுதி இருக்கிறார். இந்த பாடலின் இடையில் வரும் ‘’மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே’’ என்ற வரியை தான் மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே என்று வாலி தனது முதல் வரியை அமைத்திருப்பார். வள்ளலார் சிவபெருமான் மீது கொண்ட காதலால் பாடிய இந்த பாடலை ஒரு காதல் பாடலாக வாலி கொடுத்திருக்கிறார் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்"

Leave a comment

Comment