TamilsGuide

முதல் படம் ரிலீஸ் - ஜெயலலிதாவை உள்ளே விடாத தியேட்டர் நிர்வாகம்- காரணம் இதுதானோ!

தமிழில் தான் நடித்த முதல் படத்தை தியேட்டரில் பார்க்க ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆரை போலவே தனி முத்திரை பதித்தவர் தான் ஜெயலலிதா. தனது 13- வயதில் ஆங்கில படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்,  தனது 17-வது வயதில், வென்னிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் ஜெயலலிதா.
பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், ஜெயலலிதா தான் நடித்த முதல் படத்தை தியேட்டரில் பார்க்க அனுமதி கிடைக்காமல் தவித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் வென்னிற ஆடை படத்தின் கதையை எழுதிவிட்டு, ஒரு இளம் நடிகைக்காக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார். அப்போது ஒருநாள் நம்பியார், தனது நண்பர்களான ஸ்ரீதர், சித்ராலயா கோபு, நடிகர் கோபால கிருஷ்ணன் ஆகியோருடன் ஒரு நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஒரு பெண், நீச்சல் உடையில் குளிக்க வந்ததை பார்த்த இவர்கள் இந்த பெண் நமது படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து இந்த பெண்னை நடிக்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நடிகர் கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் குடும்ப நண்பர் என்பதும், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நாடக நடிகை என்பதும் தெரிந்துள்ளது. அதன்பிறகு, நடிகர் கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கேட்க, அவரும் புரிந்துகொண்டு ஜெயலலிதாவை நடிக்க அனுப்பியுள்ளார். 
அதன்பிறகு படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1965-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி படம் வெளியாகியுள்ளது. வென்னிற ஆடை நிர்மலா, வென்னிற ஆடை மூர்த்தி ஆகியோர் இந்த படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், ஏற்கனவே அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் வெளியான சமயத்தில் சென்சார் அதிகாரிகள் ஆடைக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வென்னிற ஆடை படத்தில் கவர்ச்சியாக காட்சிகள் சற்று அதிகமாக இருந்தால், படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்க்க கூடாது என்று சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அப்போது 17 வயதே ஆகியிருந்த ஜெயலலிதாவை தியேட்டரில் படம் பார்க்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். 

இந்த தகவலை சமீபத்தில் பேட்டி அளித்த இந்த படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும் இயக்குனருமான சித்ராலயா கோபு கூறியுள்ளார்.

 

Leave a comment

Comment