TamilsGuide

ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதேச ஊடகவியலாளர்களைப் பாராட்டும் விதமாக ‘நாடளாவிய பிரதேச ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தமது பிரச்சினைகளையும் முறைபாடுகளையும் தெரிவிப்பதற்கான ஒரு இடம் தேவை.

பத்திரிகை சபைக்கு பதிலாக ஊடக ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

பிரதேச ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அடுத்த புதிய நாடாளுமன்றத்தில் அது குறித்து கவனம் செலுத்துவோம்.
நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்பாடுகளை எட்டியுள்ளோம்.

அந்த நிபந்தனைகளை யாராலும் நீக்க முடியாது. அந்த நிபந்தனைகளை மாற்றினால், சர்வதேச நாணய நிதியம் அதிலிருந்து விலகும். அதனால் நம் நாட்டுக்கு கிடைக்கும் பணத்தை இழக்க நேரிடும்.

எனவே எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். நான் ஒருபோதும் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை. தேர்தலை ஒத்திவைக்கப்போவதாக சிலர் கூச்சலிட்டனர். ஆட்சியை கொடுத்ததும் ஓடிப்போய் தேர்தல் நடத்துவதில் அர்த்தமில்லை” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment