TamilsGuide

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இந்த தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்துள்ளனர்.

எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரை தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் தற்போது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி. விக்னேஸ்வரனை பரிசீலிப்பதாகவும் குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாக பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்கு பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment