TamilsGuide

தினமணி கதிர் இதழில் வாசர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள்

தினமணி கதிர் இதழில் 1970 முதல் 1972 வரை வாசர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்களில் இருந்து தொகுத்தவை.. உங்களுக்காக....

1:கே.: நீங்கள் எப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவுகிறீர்கள்?
பதில்: அவ்வளவு தெளிவாகப் பகுத்துப் பார்த்து உதவ என்னால் முடிவதில்லை. நான் செய்வதோ மிகக் கொஞ்சம். அதில் வலது இடது என்று எப்படிப் பார்க்க முடியும்?
2:கே: தனிப்பட்ட முறையில் காமராஜ் அவர்களுக்கு எந்த வகையில் மதிப்பளிக்கிறீர்கள்?
பதில்: உண்மையோ பொய்யோ, தர்மமோ அதர்மமோ தன்னுடைய கட்சியை வளர்க்க அவர் சிறப்பாகப் பாடுபடுகிறார்.
3:கே: தாங்கள் முதன்முதலில் காமிராவிற்கு முன்னால் நிற்கும் பொழுது என்ன நினைத்தீர்கள்?
பதில்: பிறர் கேலி செய்யாத அளவுக்கு ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.
4:கே: தாங்கள் சிறுவயது முதல் எந்த எந்த முறைகளைப் பின்பற்றி வந்ததால், இப்போதும் நீங்கள் திடகாத்திரமான கட்டு மஸ்தான உடலையும் வலிமையையும் பெற்றிருக்கிறீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: எதையும் அளவோடு ரசிப்பவன் நான்.
5:கே: தமிழர்களின் உரிமை பறிபோகின்ற காலத்தில் தமிழர்களின் மனம் எவ்வாறு இருக்கும்? அவர்களின் எண்ணம், கொள்கை என்ன பாடுபடும்?
பதில்: இனிமேல்தான் பறிபோகப் போவது போலவும், பறி போகின்ற காலம் ஒன்று எங்கேயோ இருப்பதாகவும் எண்ணித் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்! இப்போதே பறிபோன நிலைதானே? இழந்த உரிமைகளைப் பெறவும் தானே மாநில சுயாட்சித் திட்டம் உருவாகியுள்ளது. கே: தங்களுக்கு குழந்தை பிறந்தால்...? பதில்: அந்த முதற்குழந்தை ஆணாக இருக்கும்.
6:கே: கழகத்தின் மூலம் நீங்கள் வளர்ந்தீர்களா? அல்லது உங்கள் மூலம் கழகம் வளர்ந்ததா?
பதில்: கழகத்தின் மூலம் கொள்கை வளர்ந்தது. அந்தக் கொள்கையைக் கொண்ட கலையின் மூலம் நான் வளர்ந்தேன்.
7:கே: நீங்கள் சகுனம் பார்ப்பதுண்டா? இல்லையா?
பதில்: இல்லை. கே: கலைவாணர் என்.எஸ்.கே. இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
பதில்: எங்களுக்கெல்லாம் எவ்வளவோ நிம்மதி ஏற்பட்டிருக்கும்.
8:கே: மாலை போடுகிறவர்களைப் பற்றி உங்கள் கருத்துகள்?
பதில்: தற்போது மாலைகளுக்குச் செலவிடும் பணத்தை அவரவர் பெயரில் சிறு சேமிப்புத் திட்ட்த்தில் சேர்த்தால் நாட்டிற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும்.
9:கே: கீழ்த்திசை நாடுகளைக் காணும்போது இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?
பதில்: ஜப்பான் போன்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியா எப்போது இந்த அளவுக்கு உயரும் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது.
10::கே: ஜெயலலிதா உங்களுக்கு போட்டியாகத்தானே கீழ்த்திசை நாடுகளைச் சுற்றி வந்தார்?
பதில்: நான் அங்கு இருக்கும்போது திருமதி ராஜசுலோச்சனா கூட சுற்றுப்பிரயாணம் வந்திருந்தார். சமீபத்தில் திரு ஜெய்சங்கர் தமது வாழ்க்கைத் துணைவியோடு சென்று வந்தார். இவர்கள் எல்லோரும் எனக்குப் போட்டியாகச் சென்றார்கள் என்றுதான் கற்பனை செய்கிறீர்களா? யாரும் போட்டிக்காகச் செல்லவில்லை வாய்ப்புக் கிடைத்து; சென்றார்கள்.
11:கே: மற்ற தொழில் துறையில் உள்ளவர்கள் சினிமா துறைக்கு வரவேண்டும் என எண்ணுகின்றனர். அதைப்போல் நீங்கள் சினிமா துறையை விட்டு வேறு துறைக்கு வரலாம் என்று எண்ணியதுண்டா?
பதில்: நான் பட்டாளத்துக்குப் போகவிருந்தவன் என்ற சேதியை முன்பே எழுதியிருக்கிறேன்.
12:கே: திரைப்பட நடிகைகளால் மாணவியர் கெடுகிறார்களா? மாணவியரால் திரைப்பட நடிகைகள் கெடுகிறார்களா?
பதில்: பெரியவர்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள். கே: உங்கள் மனைவி திரைப்படத்தில் ஏன் நடிப்பதில்லை? பதில்: விரும்பாத காரணத்தால்.
13:கே: சினிமா உலகில் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
பதில்: நான் சுடப்பட்டதுகூட என் மேல் அன்பு வைத்த நண்பரால் தான் என்றா கூறுகிறீர்கள்?
14:கே: தங்கள் உடல்கட்டு அன்றுபோல் இன்னும் உள்ளதற்குக் காரணம் தங்கள் உள்ளத் தூய்மைதானே?
பதில்: எனக்குத் தெரியாது.
15:கே: ’அடிமைப் பெண்’ படத்தில் ஜெயலலிதா, தனது சொந்தக் குரலில் பாடியதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: நான்தானே அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அதைக் கேட்ட நீங்கள் அல்லவா கருத்து கூற வேண்டும்.
16:கே: மதுரை மாநகர் பற்றி ஏதாவது கூறுங்கள்.
பதில்: தமிழகத்தின் வீறு கொண்ட சமீப காலத்திய வரலாற்றில் நல்ல திருப்பங்களை முன்னோடியாக இருந்து நிறைவேற்றுவது மதுரை மாநகரம்.
17:கே: விசுவநாதனின் இசையில் மயங்கியவரா தாங்கள்? இல்லை உங்கள் நடிப்பில் அவர் மயங்கியவரா?
பதில்: கலையில் நாங்கள் இருவரும் மயங்கியிருக்கிறோம்.
18:கே: உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுக்க முன்வந்து, அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?
பதில்: உண்மை கே: நாவலரைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? பதில்: நல்லவர்; ஒழுக்கசீலர்.
29:கே: இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன?
பதில்: முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும்.
20:கே: கலையுலகம், அரசியல் இவற்றில் எதை மிகவும் அதிகமாக விரும்புகிறீர்கள?
பதில்: கலையுலகத்தை.

21:கே: நீங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்ததற்கு என்ன காரணம்?
பதில்: அண்ணாவின் ’பணத்தோட்டம்’ என்ற புத்தகமும், என் அறிவுக்குட்பட்ட வகையில் தெரிந்துகொண்ட உலக அனுபவமும்.
22:கே: தமிழர் பண்பாட்டுப்படி மந்திரியாவதற்கு இலக்கணம் யாது?
பதில்: மக்களாட்சித் தத்துவப்படி மக்களின் நம்பிக்கை பெற்றவராதல்.
23:கே: நடிப்பிலே சிறந்த நடிகை, நடிகையர் திலகம் சாவித்திரி என்கிறேன் நான். உங்கள் கருத்து என்ன?
பதில்: இப்படிப் புதிதாக ஒரு கேள்வியைக் கேட்பதால்தான் பிறருக்குச் சந்தேகமே வருகிறது. இல்லாத ஒரு சந்தேகத்தைத் தோற்றுவிப்பதே இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பதுதான்.
24:கே: கடவுள் பற்றிய உங்கள் கொள்கை நிலை மாறியுள்ளதா?
பதில்: கடவுள் பற்றிய என் கொள்கை நிலை எப்போதுமே மாறுபட்டதில்லை.
25:கே: அரசியல் உலகில் நீங்கள் ஏன் உயர்ந்த நிலையை விரும்பவில்லை?
பதில்: அது நிலையற்றது என்ற காரணத்தாலும், எனது சுதந்திரம் பறி போய்விடும் என்ற அச்சத்தினாலும், ஒரு சில நண்பர்களையாவது நான் இழக்க வேண்டி வரும் என்று உணர்வதாலும் அரசியலில் எந்தப் பதவியையும் நான் விரும்பவில்லை.
26:கே: சாதாரணமாக ஓர் ஆண் வீதியில் நடந்து சென்றால் மற்றவர்கள் அவனைக் காண்பது கிடையாது. ஆனால், அதே வீதியில் ஒரு பெண் நடந்து சென்றால் அனைவரும் கூர்ந்து அவளைக் காண்பர். இச்சமுதாயத்தில் ஏன் இப்படி?
பதில்: ஆண்களின் பலவீனம்; இயற்கை பெண்களுக்கு அளித்திருக்கும் சக்தி.
27:கே: நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்ன?
பதில்: பிறவாதிருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று இப்போது சொல்லுகிறேன், அப்போது என்ன நினைப்பேனோ?
28:கே: கலைவாணரிடம் நீங்கள் சண்டையில் தோற்றீர்களா? நம்பவே முடியவில்லை?
பதில்: அவர் கலைவாணராயிற்றே! நான் எப்படித் தோற்காமலிருக்க முடியும்?
29:கே: எம்.ஜி.ஆர்., சிவாஜி இவர்களைப் பற்றி ‘ரசிகன்’ என்ற முறையில் தாங்கள் கொண்டுள்ள கருத்து என்ன?
பதில்: அவரவர் கொள்கைக்காக, அவரவர் வாழ்வுக்காகத் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிற அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் சரியான வழியில் செல்ல முயல்வதை, நாகரிகமற்ற முறையில் வெளியார் தடுக்கிறார்களே என்ற ஏக்கம் அவர்கள் இருவருக்கும் இருக்கும் என்று கருதுகிறேன்.
30:கே: நீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியம் எது? ஏன்?
பதில்: அந்த அளவுக்கு இலக்கியம் படித்தவனல்ல நான்.
31:கே: நாத்திகன் எப்போது ஆத்திகன் ஆகிறான்?
பதில்: சிறந்த ஒரு ஆத்திகன்தான் நல்ல ஒரு நாத்திகன் ஆக முடியும்.
32:கே: மழலையின் குழறும் மொழி, மங்கையின் மது மொழி இவற்றில் தாங்கள் விரும்புவது? பதில்: மங்கையின் மதுமொழியை ரசிப்பவர் குழந்தையின் குழறும் மொழியைக் கேட்கும் வாய்ப்பைப் பெறலாம்.
33:கே: உங்களுடன் நெருங்கி இருப்பவை எவை?
பதில்: எந்தச் சூழ்நிலையிலும் எதைப் பற்றியும் முடிவான நிலைக்கு என்னை ஆளாக்கிக் கொள்ளுகின்ற சுதந்திரமும் ஒன்று.
34:கே: ஓர் அரசியல்வாதி, ஒரு நடிகர், இவர்களுக்கு எப்படிப்பட்ட விளம்பரம் தேவை?
பதில்: வசூல் நிறைய ஆகிறது என்ற உறுதியைத் தரும் விளம்பரம் நடிகருக்குத் தேவை, தொண்டு செய்வதில் தியாக உணர்வோடு செயல்படுபவர் என்ற உத்தரவாதம் அளிக்கும் விளம்பரம் அரசியல்வாதிக்குத் தேவை.
35:கே: சினிமாவில் ஆபாசத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சமூகத்தில் உள்ள ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
36:கே: ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று அனுபவம் பெற்ற அரசியல்வாதிகள் கூறுகிறார்களே..... இக்கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: ’சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் ஏது!’ என்ற பழமொழியை அவர்களுக்கு நினைவுப்படுத்துங்கள்.
37:கே: தமிழ்நாட்டில் ’மக்கள் திலகம்’ என்றும் ‘புரட்சி நடிகர்’ என்றும் பட்டம் வாங்குவது அற்புதம் அல்லவா?
பதில்: அது அற்புதமோ இல்லையோ, என்மேல் அனுதாபம் கொண்டவர்கள். ‘பாவம் பிழைத்துப் போகட்டும்’ என்று அந்தப் பட்டங்களைக் கட்டிவிட்டார்கள். அப்படிப்பட்ட தகுதி எனக்கில்லாவிடினும், முழுத் தன்மை வாய்ந்த ஒருவனாக என்னை ஆக்கிக்கொள்ள முடியாவிட்டாலும், கொஞ்சமாவது அவைகளுக்குப் பொருத்தமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்மீது சுமத்தப்பட்டுவிட்டது.
38:கே: தங்கள் தாயார் இப்பொழுது இருந்தால் தங்கள் முன்னேற்றத்தைக் கண்டு எப்படியிருப்பார்கள்?
பதில்: அனுதாபப்படுவார்கள். ‘என் மகனுக்கு முன்னேற்றம் வருவானேன், முந்நூறு எதிரிகள் புதிதாகத் தோன்றுவானேன்’ என்று அனுதாபப்படுவார்கள். -

 

(இந்த பதில்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர். அளித்தவை. தினமணி கதிர் இதழில் 1970 முதல் 1972 வரை வாசர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்களில் இருந்து தொகுத்தவை: இது எஸ்.கிருபாகரன் தொகுத்த எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை)

Gdevaraj Gdevaraj
 

Leave a comment

Comment