TamilsGuide

ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார் கமலா ஹாரிஸ் - விரைவில் வேட்புமனுத் தாக்கல்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார். தொடர்ந்து கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடந்த தேர்தலில் பைடன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் விலகியதை அடுத்து தற்போது மீண்டும் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாகக் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment