TamilsGuide

சங்கராபரணம் (1980) 

இசையும் கதை சொல்லும் நேர்த்தியும் கைகோர்த்து எப்படி ஒரு அற்புதமான திரைப்படம் உருவாகும் என்பதற்கு சாட்சிதான் இந்த சங்கராபரணம் திரைப்படம்.
பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தூய்மைவாதியான இசை கலைஞர் சங்கர சாஸ்திரிகள்(வி சோமயாஜுலு) தன்னை குருவாக மதிக்கும் ஓர் மாதரசி துளசிக்கு ( மஞ்சு பார்கவி) அடைக்கலம் கொடுக்கிறார். அதையும் எப்போது கொடுக்கிறார் ? வேசியின் மகளாக இருந்தாலும் மாசற்ற மாணிக்கமாக இருந்தவள் கயவன் ஒருவனால் கெடுக்கப்படுகிறாள் . இதற்கு அவள் தெய்வ தாயும்" உடந்தை .
கெடுத்த வில்லன் கெடுத்தது லாபம் என்று பேசாம போகாமல் இலவச இணைப்பாக அவள் தெய்வமாக மதிக்கும் சங்கர சாஸ்திரிகளை அவமதித்து அவர் படத்தை எட்டிட்டு உதைக்க வெறியான மஞ்சு பார்கவி உடைந்த கண்ணாடி துண்டால் அவனை சதக் சதக்'கி விடுகிறாள் . அப்போது நடந்த உண்மையை சொல்லி சங்கர சாஸ்திரிகளிடம் அடைக்கலம் ஆகிறாள் .
இதிலென்னங்க தப்பு இருக்கு ? சொல்லுங்க.. அதெப்படி ஊருக்குள் பெத்த” பேருடன் இருக்கும் சாஸ்திரிகள் இப்படி செய்யலாமா " என்று அவரை ஊர் மக்கள் எப்போதும் செய்வது போலவே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள் . புகழ் போச்சு , மரியாதை போச்சு , கச்சேரி போச்சு , என்று அவர் பொருளாதார சுருதி இறங்கி விடுகிறது .
தன்னால் சாஸ்திரிகள் அவமானப்படுவதை கண்ட மஞ்சு பார்கவி அவர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் . இதனால் மான மரியாதை திரும்ப வந்தாலும் பொருளாதாரம் மேம்படவில்லை . மேல் நாட்டு பாப் இசையிலும் மக்களின் ரசனையும் மாற்றம் பெற சாஸ்திரிகள் மவுசு குறைந்து வறுமையில் தான் உழல்கிறார் .இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும் தான் மீதி படம் .

இயக்குனர் கே விஸ்வநாத்துக்கு சங்கர சாஸ்திரிகள் வேடத்திற்கு முதலில் நாகேஸ்வர ராவ் தான் முதல் தேர்வாக இருந்து இருக்கிறது . பின்னர் அது நடக்காமல் போக அவருக்கு அந்த வேடத்திற்கு நடிகர் திலகத்தை அணுகலாம் என்ற எண்ணமும் இருந்ததாம் . அதுவும் நிறைவேறாமல் போக அவர் வி சோமயாஜுலுவை நடிக்க வைத்து இருக்கிறார். சரியான தேர்வுதான் . அந்த கதாபாத்திரத்திற்கு எந்த ஒரு ஸ்டார் இமேஜும் இல்லாது இருப்பதுதான் சிறப்பு .
இதே மாதிரி இந்த படம் முழுக்க முழுக்க கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் முதலில் பிரபல கர்நாடக பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவை தான் அணுகி இருக்கிறார்கள் . அவரோ 'சங்கீதமா.. அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ' என்று அசால்ட்டாக திரைப்படங்களில் பாட அதிகம் ஆர்வம் காட்டாததால் எஸ் பி பி அவர்களை பாடல்களுக்காக தேர்வு செய்தனர் .
படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அதில் ஒன்பது பாடல்களை பாடியிருந்தார் SPB, இந்த பட பாடல்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்தது . சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்கு பல சர்வதேச விருதுகளும் . நான்கு தேசிய விருதுகளும் கிடைத்தன. கே வி மஹாதேவன் தந்த சூப்பர் மியூசிக்கல் ஹிட் இது. .
படத்தில் ஏகப்பட்ட "இயக்குனர் தொடல்" காட்சிகள் நிறைய உண்டு . தன்னை கெடுத்தவன் குருதி கொண்டு தன் தேவுடு சங்கர சாஸ்திரிகள் பாதத்தை மஞ்சு பார்கவி கழுவுவதும் இறுதி பாடலில் டாக்டரை அழைத்து வரும் சந்திரமோஹனை பார்த்து முடியாமல் இருக்கும் சோமயாஜுலு வேண்டாம் என்று கையமர்த்துவதும் என்று ஏகப்பட்ட காட்சிகள் .
நாயகி மஞ்சு பார்கவி பாந்தமான நடிப்பு . நடிப்போடு துடிப்பான நாட்டியமும் ஆடுகிறார் . அதிலும் ஆரம்ப பாடலில் சாஸ்திரிகள் சபா மேடையில் பாட இவர் உட்கார்ந்துகொண்டே இரு கைகளில் நடன அபிநய முத்திரை காட்டுவது அழகு என்றால் .சாஸ்திரிக்கே தெரியாமல் அவர் பாடலின் உந்துதலால் இவர் அந்த ஆற்றங்கரையில் நடனமாடுவது பேரழகு.
பாக்யலட்சுமியோட (விஜய் டீவி ) மாமியார் ராஜலட்சுமியை குண்டு கண்களோடு சங்கர சாஸ்திரிகள் மகளாக இளமையாக காண முடிகிறது . இப்போதைய அம்மா’ நடிகை துளசி சங்கரன் " வேடத்தில் குழந்தை நட்சத்திரம்.
படம் தமிழ்நாட்டில் ஏகத்துக்கும் பிய்த்து கொண்டு ஓடியது . அந்த வயதில் படத்தின் சிறப்பு தெரியாததால் இந்த கர்நாடக கச்சேரி படத்துக்கு இவ்வளவு வரவேற்பா? என்று நான் வியந்துதுண்டு . பின்னாட்களில் தான் படத்தின் அருமை தெரிந்தது . சோமயாஜீலுவை கே விஸ்வநாத் ன்னு நான் நினைச்ச காலம் அது . பெரியவங்க எல்லாரும் கே விஸ்வநாத் படம்ன்னு சொன்னாங்க . அதான் .!
சென்னையில் எந்த தியேட்டர் என்று நினைவு இல்லை . சத்தியம் காம்ப்ளெக்ஸில் உள்ள சுபம் தியேட்டரா.அகஸ்தியா தியேட்டரா ? ஆண்களும் பெண்களும் படம் பார்க்க ஆர்வம் கொண்டார்கள் . படம் பற்பல நாட்கள் ஓடியதாக ஞாபகம் .
பாடல்கள் சங்கரா நாதசரீராபரா.. தொரகுனா இதுவன்டி சேவா... ஓம்கார நாதானு... ராகம் தாளம் பல்லவி போன்ற பாடல்கள் ஈ மொய்க்காமல் காதில் தேனாக பாய்கிறது . பாடலுக்காக படமா படத்திற்கு பாடலா என்று பட்டி மன்றமே வைக்கலாம் .
தொரகுனா ..இதுவன்டி சினிமா !

 

-ஆறுமுகம் 
 

Leave a comment

Comment