TamilsGuide

டெல்லி கணேஷ் - 80

சினிமாவில் துணைக் கதாப்பாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். நாமும் அவர்களை அனைத்துப்  படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களின் நடிப்பை பாராட்டவோ, அவர்களின் பங்களிப்பை நினைவுகூறவோ நமக்கு நேரம் இருப்பதில்லை. ஏனெனில் நமக்கு பிடித்த சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர், ஒளிப்பதிவாளர் என பலரையும் பாராட்டி சிலாகிக்கும் நாம் தான் துணைக் கதாபாத்திரங்களை மறந்தே  விடுவோம். அவர்களில் பலரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவதும்  ஒரு காரணமாக இருக்கும். ஒரு பஞ்சாயத்துக் காட்சி, ஒரு மருத்துவமனை, ஒரு காவல் நிலையம்  என எந்த ஒரு சூழலாக இருந்தாலு இந்த துணைக் கதாபாத்திரங்களின் பங்களிப்பு மிக அவசியம். அவர்கள் தான் அந்த காட்சியின் நம்பகத்தனமையை உருவாக்குபவர்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் எப்போதும் கிடைத்ததில்லை. அப்படியான ஒரு துணைக் கதாபாத்திரமாக ஜொலித்த நட்சத்திரம் தான் திரு டெல்லி கணேஷ் அவர்கள். 

இவரை வெறும் துணைக் கதாபாத்திரமாக சுருக்கி விட முடியாது தான். எத்தனையோ முக்கிய வேடங்களை அனாயசமாக செய்திருக்கிறார். இவரை ரசித்துப் பார்த்த படங்களை பட்டியலிட்டால் குறைவாகத்தான் வரும். ஆனால் இவர் நடித்துள்ள படங்களின் பெயர்களைப் பார்த்தால், "இந்த படத்துல இவர் நடிச்சுருக்காரா?" எந்த கேரக்டர் என்று சட்டென்று நினைவு வராது. ஏனென்றால் ஒரு காட்சி, இரண்டு காட்சிகளில் வந்து போகும் கேரக்டராக இருந்தாலும் அதை சிரத்தையுடன் செய்யக்கூடிய நடிகர்களில் டெல்லி கணேஷ் அவர்களும் ஒருவர். 

டெல்லியில் இந்திய விமானப் படையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேஷ், நாடகங்கள் மீது தீராக்காதல் கொண்டவர். மாலை வரை வேலை, அதன் பிறகு நாடகம் என்பதை தினசரி கடமையாக கொண்டிருந்தவர். ஒரு கட்டத்தில் நாடகம் தான், நடிப்பு தான் வாழ்க்கை என்று முடிவெடுத்து வேலையை விட்டு வருகிறார். இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் கண்ணில் பட்டு சாதா கணேஷ் டெல்லி கணேஷ் ஆகிறார். தனது 47 வருட திரை வாழ்க்கையில் எண்ணிலடங்கா மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், வெப் சீரீஸ், விளம்பரங்கள் என இன்றளவும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார். அவரே ஒரு மேடையில் சொன்னது போல வாழ்க்கை முழுவதும் பெரிய விருதுகளோ அங்கீகாரமோ கிடைக்காமல் காணாமல் போன பல கலைஞர்களைப் போலத்தான் இவரும். 

ஆனால் கலைஞானியின் கண்ணில் பட்டு அவருடைய பட்டறைக்குள் சென்றது தான் இவருடைய வாழ்நாள் அதிர்ஷ்டம்.  அங்கு தான் இவரின் நடிப்புக்கான தீனி கிடைத்தது. இன்னும் புடம் போடப்பட்டார். ராஜ பார்வை படத்தில் இருந்து எத்தனையோ படங்கள் கமலுடன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ் என்றதும் நம் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கமல் இவருக்கு கொடுத்த வெரைட்டியான கதாபாத்திரங்கள் மட்டும்தான். 

நகைச்சுவை நடிகராக, துணைக் கதாபாத்திரமாக வலம் வந்தவரை அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக்கினார் கமல்.  "என்னை அடிச்சுக் கூட கேட்டாங்க நாயக்கரே, ஒரு வார்த்தை சொல்லலை" என்ற வசனத்தை பேசும் ஐயர் கேரக்டரை யாரால் மறக்க முடியும். அந்தக் காட்சி வரும் வரை அப்படி ஒரு கேரக்டர் படத்தில் இருப்பதே நமக்கு பெரிதாக உறைக்காது. அந்த ஒரு காட்சியில் தன் இருப்பை தக்க வைத்திருப்பார். மைக்கேல் மதன காமராஜன் பாலக்காட்டு மணி அய்யராக டெல்லி கணேஷும், காமராஜனாக கமலும் சேர்ந்து அதகளம் செய்திருப்பார்கள். டெல்லி கணேஷ் மேடை நாடக நடிகர் என்பதால் டைமிங்கில்  டிஸ்டிங்ஷன் வாங்கியவர். டைமிங் டயலாக் டெலிவரி ஆகட்டும், ரியாக்‌ஷன் ஆகட்டும் அட்டகாசமாக இருக்கும். 

அவ்வை ஷண்முகி படத்தில் சேதுராம ஐயர் கதாபாத்திரம் ஒரு மைல்கல். அந்த காமெடி  எவர்கிரீன் போர்ஷன். "அண்ணா எடுத்துக் கொடுக்கறான்னா" என்று டெல்லி கணேஷின் டயலாக்கும், பாடி லாங்வேஜும் வேற லெவல். தெனாலியில் டாக்டர் பஞ்சபூதமாக படம் முழுவதும் வரும் கேரக்டர். பாபநாசம் வரை கமலின் எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் ஒரு கேரக்டர் டெல்லி கணேஷுக்கு இருக்கும். அவர் இல்லாத கமல்.படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

கமல் பேட்டைக்கு வெளியேவும் பல முக்கியப் படங்கள் அவர் பேர் சொல்லும். "ஆஹா" திரைப்படம் அதில் ஒன்று. கிரேசி மோகனின் காமெடிக்கு உயிர் கொடுப்பத்திருப்பார்.  விவேக்குடன் காமெடியில் இணைந்து அசத்திய முக்கியமான படம்  "எதிரி". அட்டகாச டைமிங் காமெடியில் கலக்கியிருப்பார். 

நான் முன்னரே சொன்னது போல இவர் நடித்துள்ள படங்களின் லிஸ்டை பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அத்தனை படங்கள். அத்தனை கதாபாத்திரங்கள். ஆனால் கமல் அளவுக்கு இவரின் நடிபுத் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் வேறு யாரும் இல்லை. அந்த வகையில் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளாத கலைஞன் என்று கூட சொல்லலாம். 

வயது ஆனாலும் இப்போதும் மேடைகளில் ஆர்வமாக பங்கேற்கிறார். நாடகங்களில் நடிக்கிறார். சாய் வித் சித்ராவில் இவருடையை பேட்டி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் சித்ரா லட்சுமணன் சார். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முக்கியமான கலைஞர்களில் டெல்லி கணேஷும் ஒருவர். 
 

Leave a comment

Comment