TamilsGuide

மறக்க முடியுமா சிவாஜியை திணறவைத்த படம்.. தில்லானா மோகனாம்பாள் 

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான் இன்றைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பழைய படங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டிய பேரோளி பத்மினி நடிப்பில் உருவான திரைப்படம் தான் 'தில்லானா மோகனாம்பாள்'. இந்த படம் ரிலீசான சமயத்தில் நாம் பிறந்திருக்கவே மாட்டோம். ஆனாலும் இந்த படம் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது அந்த அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது.
புராணப்படத்தை புதுமையாகத் தயாரித்த ஏ.பி.நாகராஜன், அதற்கு ஒரு படி மேலே போய் இயற்கையாகவும், கலை அழகுடனும் தயாரித்த சமூகப்படம் தில்லானா மோகனாம்பாள். சிவாஜி கணேசன் சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதஸ்வர வித்வானாகவும், பத்மினி நாட்டிய நங்கை மோகனாம்பாளாகவும் வாழ்ந்து காட்டினர்.
'தில்லானா மோகனாம்பாள்' என பெயர் சொன்னதும் நாதஸ்வர வித்வானாக வரும் சிவாஜி கணேசன், பரத நாட்டிய கலைஞராக வரும் பத்மினி, வைத்தியாக வரும் நாகேஷ், ஜில் ஜில் ரமாமணியாக வரும் மனோரமா, தவில்காரராக வரும் பாலையா என அனைவரும் கண்முன் வந்து போவார்கள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலுக்கு உயிர் கொடுத்தார் ஏ.பி.நாகராஜன். ஒரு சிறந்த படத்துக்கு வேண்டிய அனைத்து அம்சங்களும் படத்தில் நிறைந்திருந்தன.
மறக்க முடியுமா நலந்தானா?
கே.வி.மகாதேவன் இசையில் ஒலித்த 'நலந்தானா'.. 'மறைந்திருக்கும் பார்க்கும் மர்மம் என்ன?'.. ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்தப் படத்தில் ஒரு விஷேசம் பாடல்கள் எல்லாம் பெண் குரலிலேயே ஒலித்தன. ஆண் குரல் ஒலிக்கவில்லை. அதாவது நாதஸ்வர வித்துவான் சண்முகசுந்தரம் (சிவாஜி) பாடினால் அது இயற்கையாக இருக்காது என்பதால் அவருக்கு பாட்டுக் கொடுக்கப்படவில்லை. இந்த படத்தின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு ராகமும் படத்தின் கதை மற்றும் கேரக்டருடன் தொடர்புடையதாக இருக்கும்
விருதுகளை குவித்த 'தில்லானா மோகனாம்பாள்'
1968ஆம் ஆண்டு ஜுலை 27-ல் இந்த படம் ரிலீசானது. சிறந்த நடனம், சிறந்த இசைக்காகவே இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் வசனம், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தது.
56 ஆண்டுகளான தில்லானா மோகனாம்பாள்

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட இந்த திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல வசூலைக் குவித்து சாதனை படைத்த 'தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. 'தில்லானா மோகனாம்பாள்' வெளியாகி 56 ஆண்டுகளாகின்றன. காலங்கள் உருண்டோடினாலும் பண்பிலும் பண்பட்ட நடிப்பாலும் 'தில்லானா மோகனாம்பாள்' என்றும் கொண்டாடப்படும் திகட்டாத காவியம்..!

Muthammal Rammohan

Leave a comment

Comment